கடந்த 20ம் தேதி பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து லிஸ் டிரஸ் (Liz Truss) தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அடுத்த பிரதமர் பதவிக்கு யார் வருவார்? என்று எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகின.


இந்நிலையில், பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இருந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீரென விலகியதை அடுத்து, புதிய பிரதமராக ரிஷி சுனக் வருவது உறுதியானது.






இதையடுத்து, லிஸ் டிரஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அடுத்த பிரதமராகும் போட்டியில் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழ் சபை தலைவர் பென்னி மோர்டான்ட் குதித்தார். ஆனால், அவரால் தகுந்த ஆதரவை பெற முடியாத சூழ் நிலவியது. பிரிட்டன் பிரதமராவதற்கு 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் ரிஷி சுனக்கிற்கு 142 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது.


மீண்டும் போட்டியில் நுழைந்த ரிஷி:


கோடை காலத்தில் நடைபெற்ற பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் லிஸ் டிரஸிடம் ரிஷி சுனக் தோல்வி அடைந்தார்.


ஆனால், கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் லிஸ் டிரஸ் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து, பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக் மீண்டும் நுழைந்துள்ளார்.


பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக நேற்று அறிவித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி, "நமது பொருளாதாரத்தை சரிசெய்யவும், எங்கள் கட்சியை ஒன்றிணைக்கவும், நம் நாட்டுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கவும் விரும்புகிறேன்" என்றார்.


கரீபியன் தீவுகளில் விடுமுறையை கழித்து வந்த போரிஸ் ஜான்சன், பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்காக விடுமுறையில் இருந்து பாதியிலேயே பிரிட்டனுக்கு திரும்பினார். 100 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆதரவை பெறுவதற்காக அவர் முயற்சி மேற்கொண்டார். ஆனால், திடீரென அதிலிருந்து விலகினார்.


தன்னால் நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியை ஒருங்கிணைத்து வழிநடத்த முடியாது என போரிஸ் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விரிவாக பேசியிருந்த அவர், "என்னால் பிரதமராக வந்திருக்க முடியும். ஆனால், சுனக்கையும் பென்னி மோர்டான்டையும் தேசிய நலனுக்காக ஒன்றுசேர்க்கத் தவறிவிட்டேன். நான் நிறைய வழங்க வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால், இது சரியான நேரம் அல்ல என்று நான் பயப்படுகிறேன்" என்றார்.


பிரதமர் போட்டியில் இருந்து போரிஸ் விலகியது குறித்து ரிஷி சுனக் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரெக்சிட், கொரோனா தடுப்பூசியை வழங்குதல் மற்றும் உக்ரைனில் நடந்த போர் உள்ளிட்ட சில கடினமான சவால்களுக்கு மத்தியிலும் நாட்டை வழிநடத்தியதற்காக போரிஸ் ஜான்சனை பாராட்ட விரும்புகிறேன்.


அவர் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருந்தாலும், அவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொது வாழ்வில் தொடர்ந்து பங்களிப்பார் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


புதிய பிரதமர்:


பிரதமர் போட்டியில் இருந்து போரிஸ் விலகி இருப்பதால், ரிஷி சுனக்கின் ஒரே போட்டியாளராக பென்னி மோர்டான்ட்  இருந்த நிலையில், போதுமான ஆதரவு ரிஷி சுனக்கிற்கு இருந்ததால் பிரதமராவதற்கு தகுதி பெற்றார்.


பின்னர், புதிய அரசை அமைக்குமாறு ரிஷிக்கு, இந்ங்கிலாந்து மன்னர் சார்லஸ்- 3 அழைப்பு விடுத்தார். இதையடுத்து பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக்கை, மன்னார் சார்லஸ்- 3 நியமனம் செய்தார்.






பிரிட்டனின் புதிய அரசானது பொறுப்புடனும், ஒருமைப்பாடுனுடனும் செயல்படும். முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்-ன் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என நினைத்து, அவரது உழைப்பு பார்த்து வியந்தேன், ஆனால் சில தவறுகள் நடந்துவிட்டன.


பிரெக்ஸிட் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்தும் ஒரு பொருளாதாரத்தை இந்த அரசாங்கம் உருவாக்கும். பலர் செய்த தியாகங்களுக்குத் தகுதியான ஒரு எதிர்காலத்தை நாம் உருவாக்குவோம்.  நாளையும் அதற்குப் பிறகும், ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் செயல்படுவோம். நம்மால் நிச்சயம் பல்வேறு சாதனைகளை புரிய முடியும் எனவும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார்.