உலக புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனத்தால் உருவாக்கப்படும் கார்ட்டூன்களுக்கு நாம் எல்லோருமே ஒரு காலகட்டத்தில் ரசிகர்களாகத்தான் இருந்திருப்போம். மிக்கி மவுஸ் தொடங்கி  எல்சா வரையில் குழந்தைகளை கவரும் கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கி , திரையில் உயிர்கொடுத்த நிறுவனம். திரையில் மட்டுமே கண்டுகளித்த ஒரு கதாபாத்திரத்தை நேரில் கண்முன் பார்த்தால் அது குழந்தைகளுக்கு எப்படியான அனுபவத்தை கொடுக்கும் என்பதை நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதற்காக உருவாக்கப்பட்டதுதான் டிஸ்னி லேண்ட்.


கார்ட்டூன்களில் பார்த்த கதாபாத்திரங்களின் அணிவகுப்பும் அந்த கார்ட்டூன் உலகின் அசல் பிரதிபலிப்பும் ஒருங்கே அமைந்த இடம்தான் டிஸ்னிலேண்ட். தற்போது கலிஃபோர்னியாவில் இருக்கிறது. முதன்முதலில் 1955-ஆம் ஆண்டு இந்த டிஸ்னி கோட்டை திறக்கப்பட்டது. இன்று வரையில் பலரின் ட்ரீம் லேண்டாக இருந்து வருகிறது.






இந்த நிலையில் தெற்காசியாவின் முதல் டிஸ்னிலேண்டை இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்டையில் திறப்பது குறித்து ஆலோசிக்க டிஸ்னிலேண்டின் ஒரு முக்கிய குழுவினர் இலங்கை வரவுள்ளனர். இது குறித்து  பேச இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் டயானாவிற்கு , வால்ட் டிஸ்னி அழைப்பு விடுத்துள்ளது.


18 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டிற்கான திட்டங்களைப் பற்றி விவாதிக்க விரைவில் அவர் அமெரிக்கா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இலங்கையில் டிஸ்னிலேண்ட் ஒன்றை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தானும் டிஸ்னிலேண்டின் பிரதிநிதிகளும் கலந்துரையாடியதாக டயானா தெரிவித்திருந்தார்.






அப்படி திறக்கப்பட்டால் அதுதான் தெற்காசியாவின் முதல் டிஸ்னிலேண்டாக இருக்கும். 22 மில்லியன் பலம் வாய்ந்த நாடான இலங்கை கடந்த 7 சகாப்தங்களில் இல்லாத அளவிற்கு  பொருளாதாரத்தில் தற்போது மிகுந்த சவால்களை எதிர்க்கொண்டு வருகிறது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படைத் தேவைகளை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். சுற்றுலா துறையை மேம்படுத்துவதன் மூலம் இது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் என அந்நாட்டு அரசு நம்புகிறது.