Britain Election 2024: இங்கிலாந்து நாடாளுமன்ற பொதுதேர்தலில், கெய்ர் ஸ்டோர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தனிப்பெரும்பான்மயை பெற்றுள்ளது.


ரிஷி சுனக் கட்சி படுதோல்வி:


இங்கிலாந்தில் 650 உறுப்பினர்களை கொண்ட மக்களவைக்கான தேர்தலில், நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய சூழலில் எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சி 340-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தனிப்பெரும்பன்மைக்கு 326 இடங்கள் இருந்தாலே போதுமானது என்ற சூழலில், தொழிலாளர் கட்சி அதைவிட அதிகமான தொகுதிகளில் முன்ன்லை வகிக்கிறது. அதேநேரம், கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பழமைவாத கட்சி வெறும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதன் காரணமாக தேர்தல் கருத்து கணிப்புகளின்படி, ரிஷி சுனக் தலைமையிலான பழமைவாத கட்சி ஆட்சி அதிகாரத்தை இழப்பது உறுதியாகியுள்ளது.


14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம்:


கடந்த 14 ஆண்டுகளாக பழமைவாத கட்சி இங்கிலாந்தில் ஆட்சியில் உள்ளது. இங்கிலாந்து நாடு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகியபிறகு, முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இதன் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காக நிலவும் சூழலில், பல்வேறு கருத்து கணிப்புகளின் முடிவுகளும் ஆளுங்கட்சிக்கு எதிராகவே அமைந்தன. அதன்படி, 2010 ல் கார்டன் பிரவுன் பதவியில் இருந்து விலகிய பிறகு, தொழிலாளர் கட்சியை சேர்ந்த முதல் பிரதமராக கெய்ர் ஸ்டார்மர்  வெற்றி பெறுவார் என்று நம்பப்படுகிறது. சுமார் 410 இடங்களில் அக்கட்சி வெற்றி பெறும் என்றும் கூறப்படுகிறது. முழு முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 4 கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.


ரிஷி சுனக் Vs கெய்ர் ஸ்டார்மர்


ஆளும் பழமைவாத கட்சியின் பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவரான கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் இடையே ஆரம்பம் முதலே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் நாடு முழுவதும் பயணித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது 44 வயதான ரிஷி சுனக் பேசுகையில், “ தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வரி உயர்வு மற்றும் பலவீனமான தேசிய பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அதேநேரம், “ரிஷி சுனக் சொல்வதெல்லாம் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்வதற்கான அவநம்பிக்கையான முயற்சிகள் மட்டுமே” என 61 வயதான கெய்ர் ஸ்டார்மர் குற்றம்சாட்டினார்.


தோல்விக்கான முக்கிய காரணங்கள் என்ன?


அரசின் சிக்கனம், பிரெக்ஸிட் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி போன்றவை, ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பழமைவாத கட்சியின் மீது பல்வேறு ஊழல் மற்றும் விதிமீறல் குற்றச்சாட்டுகளும் நிலவுகின்றன. கடந்த 14 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் டேவிட் கேமரூன், தெரெசா மே, போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் என 5 பேர் பிரதமர் பதவியை வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.