வடக்கு சீனாவில் பலத்த மழைக்கிடையே பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், 11 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர். ஷான்சி மாகாணம் ஷாங்க்லுவோ நகரில் உள்ள ஆற்றின் நடுவே அந்த பாலம் அமைந்துள்ளது.
சீனாவை நிலைகுலைய வைத்த காலநிலை மாற்றம்: திடீரென பெய்த மழையால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு 8:40 மணி அளவில் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து சீன அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், "நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலம் கீழே ஆற்றில் இடிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட 20 வாகனங்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட மக்கள் காணவில்லை.
கீழே ஆற்றில் விழுந்த 5 வாகனங்களில் 11 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஊடகம் வெளியிட்ட புகைப்படங்களில் பாதி பாலம் ஆற்றில் மூழ்கியதும் அதன் மேலே ஆறு ஓடி கொண்டிருப்பதையும் பார்க்கலாம்.
கடந்த செவ்வாய்கிழமை முதல் வடக்கு மற்றும் மத்திய சீனாவின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தால் குறிப்பிடத்தக்க சேதத்தை எதிர்கொண்டுள்ளன. ஷான்சியின் பாவோஜி நகரில் மழை வெள்ளத்தால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எட்டு பேர் காணவில்லை.
அடித்து தூக்கிய கனமழை: மத்தியில் சீனாவின் ஷான்சி மற்றும் ஹெனான் மாகாணங்களுக்கு அருகே உள்ள கன்சு மாகாணமும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் சீனா தீவிர காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு சீனாவில் கனமழை பெய்து வரும் சமயத்தில், வடக்கு சீனாவின் பெரும்பகுதிகள் தொடர்ச்சியான வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம், தெற்கு சீனாவில் உள்ள நெடுஞ்சாலையே தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்தது. அதில், 48 பேர் உயிரிழந்தனர். இந்த மாத தொடக்கத்தில், கிழக்கு சீனாவில் உள்ள ஒரு நகரம் வழியே சூறாவளி கரையை கடந்தது. இதில, ஒருவர் கொல்லப்பட்டார். 79 பேர் காயமடைந்தனர்.