ஒரு சில குழந்தைகள் பிறக்கும் போதே சில பிரச்னைகளுடன் பிறக்கும். அப்படி பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சரி செய்வார்கள். அந்தவகையில் தற்போது ஒரு குழந்தை பிறக்கும் போது ஒரு அரிய வகை பிரச்சினை காரணமாக சற்று வித்தியாசமாக பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து சரி செய்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 2 வயது குழந்தை ஒன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ளது. அந்தக் குழந்தை வழக்கத்திற்கு மாறாக இரண்டு ஆண் உறுப்புகளுடன் பிறந்துள்ளது. இதைக் கண்டு மருத்துவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின்னர் அந்தக் குழந்தையை ஆய்வு செய்து பார்த்த போது அவருக்கு ஒரு அரிய வகை மருத்துவ பிரச்சினை இருந்தது கண்டறியப்பட்டது.
அதாவது இந்த சிறுவனுக்கு டைபிலியா என்ற அரிய வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அரிய வகை பாதிப்பு 10 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படும். உலக மருத்துவ வரலாற்றில் இதுவரை 100 பேருக்கு மட்டுமே இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக 1608ஆம் ஆண்டு ஆண் ஒருவருக்கு இந்த வகை பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்தக் குழந்தைக்கு உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அதில் பெரிதாக இருந்த ஒரு உறுப்பை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர். அந்த உறுப்பின் மூலம் அக்குழந்தைக்கு எந்தவித பயனும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு மருத்துவர்கள் அதை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இது போன்ற பாதிப்புகளில் எந்த உறுப்பு பயன் இல்லாமல் இருக்கிறதோ அதையே மருத்துவர்கள் நீக்குவது வழக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 வயது வரை ஏன் இந்தப் பாதிப்பை அவருடைய பெற்றோர் கவனிக்கவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த வகை பாதிப்பு உள்ள நபர்களுக்கு பொதுவாக பின் நாட்களில் சிறுநீரக பிரச்னை ஏற்படும் என்று கருதப்படுகிறது. மேலும் இந்த வகை பாதிப்பு குழந்தை தாயின் வயிற்றுக்குள் வளரம் போது ஏற்படும் குறைபாடு காரணமாக ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்