ஒரு மணி நேரத்திற்கு எட்டுக்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 


இந்தியாவின் மணிப்பூரில் இரு பெண்களை ஆடையில்லாமல் ஊர்வலமாக அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நாட்டையே உலுக்கியது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக பலரும் தங்களது குரல்களை கொடுத்து, சம்பவத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் ஆங்காங்கே பெண்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் வடமாநிலங்களில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்கள் மீதும், குழந்தைகள் மீதும் பாலியல் வன்கொடுமை அரங்கேறுவது வாடிக்கையாக இருக்கும் நிலையில் மணிப்பூர் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசு விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது.


இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அரங்கேறுவதற்கு மற்றொரு உதாரணமாக உள்ளது பிரேசில். தென் அமெரிக்காவின் மிகப்பெரியதும், அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான பிரேசிலில், ஒரு மணி நேரத்துக்கு 8க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் உள்ள பப்ளிக் செக்யூரிட்டி ஃபாரம் என்ற என்.ஜி.ஓ. வெளியிட்ட அறிக்கையில், 2022ம் ஆண்டு மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 8க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும்,  நாடு முழுவதும் மொத்தமாக 74,930 பாலியல் வன்கொடுமை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது 8.2% அதிகம் என்றும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. 


பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் 60% பேர் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்றும், 10% பேர் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 70% வழக்குகளில், வீடுகளில் பாலியல் வன்கொடுமை அரங்கேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நீண்ட நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டதால் வீடுகளில் அடைந்து இருந்த சிறுமிகள் மீது இத்தகைய கொடூரம் அரங்கேறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக பதிவான வழக்குகள் மட்டுமே இத்தனை என்ற நிலையில், வழக்கு பதிவு செய்யப்படாமல் எத்தனை புகார்கள் இருக்கிறதோ என்ற கேள்வியும் என்.ஜி.ஓ. வெளியிட்ட அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ளது. 


பாதிக்கப்பட்ட ஒருசிலர் புகார் அளிக்க முன் வராததற்கு பயம், சமூக அச்சம் மற்றும் நீதித்துறையின் மீதான நம்பிக்கையின்மையே காரணம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.