Brazil: பிரேசிலில் பயணிகள் விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரேசிலில் விமான விபத்து:


பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியான வின்ஹெடோவில் நடந்த விமான விபத்து சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  VoePass இன் கூற்றுப்படி, விமானம், சாவோ பாலோவின் குவாருல்ஹோஸ் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், 58 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. உடனடியாக, தீ பிடித்தும் எரிய தொடங்கியுள்ளது. விபத்துக்கான காரணத்தை விமான நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை, மேலும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட விவரங்கள் எதுவும் தற்போது இல்லை.


வின்ஹெடோவில் விமானம் விபத்துக்குள்ளானதை தீயணைப்பு வீரர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், கூடுதல் தகவல்கள் வழங்கப்படவில்லை என்று செய்தி நிறுவனம் AP தெரிவித்துள்ளது. தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, வானில் பறந்து கொண்டிருந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.






62 பேர் உயிரிழப்பு:


பேரழிவிற்கு பதிலளிக்கும் விதமாக, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தெற்கு பிரேசிலில் நடந்த ஒரு நிகழ்வில் கூட்டத்தில் இருந்த அனைவரையும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தக் கோரினார். விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் இறந்துவிட்டதாகத் தெரிகிறது என்று அவர் கூறினார். 


நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு:


கடந்த ஆகஸ்ட் 7 அன்று நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் நான்கு சீன சுற்றுலா பயணிகள் மற்றும் ஒரு நேபாள விமானி ஆகியோர் உயிரிழந்தனர். அந்த ஹெலிகாப்டரானது காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள நுவாகோட் மாவட்டத்தில் மலைப்பாங்கான சிவபுரி தேசிய பூங்கா பகுதியில் விழுந்து நொறுங்கியது. திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மதியம் 1:54 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர், மூன்று நிமிடங்களில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்து உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் விபத்துக்குள்ளானதாக நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.


இறந்தவர்களில் மூன்று சீன ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். கேப்டன் அருண் மல்லா என்பவர் ஹெலிகாப்டரை இயக்கினார். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் எதிரொலியாக, நேபாள அரசு, நேபாள ராணுவ மூத்த பைலட் சுபாஷ் தாபா தலைமையில், மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து, விபத்து குறித்து விசாரிக்க உள்ளது. 


சமீபத்தில் ஜூலை 24 அன்று சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கியதில் 18 பேர் உயிரிழந்தனர். சமீபத்திய ஆண்டுகளில் பல விமான விபத்துகளை சந்தித்த நாடான நேபாளத்தில் சமீபத்திய விபத்து விமானப் பாதுகாப்பு குறித்த குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்புகிறது.