ஈராக்கில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடுமையான ஆடை கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. குறிப்பாக, ஹிஜாப்பை முறையாக அணியாதவர்கள் மீது அபராதமும் கடும் தண்டனையும் வழங்கப்படுகின்றன.
ஈராக்கில் சர்ச்சை சட்டம்: திருமணம் செய்வதற்கு தந்தையின் ஒப்புதல் கட்டாயம். வெளிநாடு செல்லவும் வேலைக்கு சேரவும் கணவரின் அனுமதி தேவை. இப்படி பல கட்டுப்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நிலையில், பெண்களின் திருமண வயதை குறைக்க ஈராக் அரசு திட்டமிட்டு வருகிறது.
ஈராக்கில் 18ஆக இருந்த பெண்களின் திருமண வயதை 9ஆக குறைக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதன்மூலம், 9 வயது பெண் குழந்தைகளுக்கு கூட திருமணம் செய்து வைக்கலாம். ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஈராக்கில் உள்ள தனிச்சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு புதிய சர்ச்சைக்குரிய சட்டத்தை நிதித்துறை அமைச்சகம் கொண்டு வர உள்ளது. குடும்ப விவகாரங்களில் தீர்ப்பு அளிக்கும் அதிகாரத்தை ஒன்று மதகுருமார்கள் எடுக்கலாம் அல்லது நீதித்துறை எடுக்கலாம். இருவரில் ஒருவரை குடிமக்களே தேர்வு செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது.
ஒடுக்கமுறைக்கு உள்ளாகும் சிறுமிகள்: இந்த சட்டத்தின் மூலம் சொத்துரிமை, விவாகரத்து, குழந்தை வளர்ப்பு ஆகிய விவகாரங்களில் பெண்களுக்கு இருக்கும் மிச்சமுள்ள உரிமைகளும் பறிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 15 வயதுடைய ஆண் குழந்தைகளும் திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்படும். இது குழந்தைத் திருமணம் மற்றும் சுரண்டல் அதிகரிக்க வழிவகுக்கும் என்ற மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
சிறுமிகளின் கல்வி, சுகாதாரம், நல்வாழ்வு ஆகியவற்றில் இந்த சட்ட திருத்தம் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குழந்தைத் திருமணத்தால் பள்ளி இடைநிற்றல் விகிதங்கள் அதிகரிக்கும் என்றும் முன்கூட்டிய கர்ப்பமாவது அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
குடும்ப வன்முறைகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அமைப்பான UNICEF இன் கூற்றுப்படி, ஈராக்கில் 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர்.
இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் (HRW) ஆராய்ச்சியாளர் சாரா சன்பார் கூறுகையில், "இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் நாடு முன்னோக்கி செல்லவில்லை, பின்னோக்கி நகர்வதைக் காட்டுகிறது" என்றார்.