கோபம்... கொடிய மிருகம் என்பார்கள். அது எப்போது வெளிவரும் ... எப்போது வெடிக்கும் என்பதெல்லாம் அது வரும் வழியை பொருத்தது. சில நேரம் அர்த்தமில்லாத கோபம், ஆபத்தை தரும். சில நேரம் அர்த்தமுள்ள கோபம் வலிமை பெறும். இது தான் கோபத்திற்கும், கோபத்தின் பேரில் வரும் ஆத்திரத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்.


சரி... இப்போது நாம் பார்க்கும் கோபம்... கொஞ்சம் நியாயமானது தான். ஆனால் அதற்கான எதிர்வினை இருக்கிறதே... அது அதை விட ஆபத்தானதாக உள்ளது. நம்மூரில் பஸ், ரயில் மிஸ் செய்வதெல்லாம் சகஜமான விசயம். ஏன் சில நேரம் விமானங்களை கூட மிஸ் செய்வதுண்டு. சில நேரம் நாம் சரியான நேரத்தில் வந்திருந்தும், அவை ரத்து செய்யப்படும். அப்போது நமக்கு ஒரு வித கோபம் வரும். ஆனால் அந்த கோபம் வெறும் முணுமுணுப்பாக முடிந்து போகலாம். சிலர் நொந்து கொண்டு அங்கிருந்து புறப்படுவர். சிலர், ஒரு படிமேலே போய் சட்டரீதியான போராட்டங்களை கூட செய்வதுண்டு. பெரும்பாலும் வன்முறை செய்வோர் இங்கு குறைவு. காரணம், ஏதாவது ஒரு டார்ம்ஸ் அண்ட் கண்டிஷன் அதில் இருக்கும் என்கிற புரிதல் இருக்கும்.


ஆனால் இங்கு நீங்கள் பார்க்கும் இந்த வீடியோவில் வரும் நபர், தனது விமானம் ரத்தானதால் ரத்தக் கொதிப்பு வந்து அந்த ஏர்போர்ட்டை சூறையாடுகிறார். பிரேசில் நாட்டின் ஸ்ஷா பேலோ என்கிற சர்வதேச விமான நிலையத்திற்கு தம்பதியாக வந்த அவர், தனது விமானம் ரத்து செய்யப்பட்ட சேதி அறிகிறார். அவ்வளவு தான், அதன் பிறகு அந்த இடமே கபலிகரமாகிறது. 



அங்கிருந்த தடுப்பு கம்பியை எடுத்து விமான நிறுவன டெஸ்கை அடித்து நொறுக்கிறார். அங்கிருப்பவர்கள் எல்லாம்  சிதறி ஓடுகிறார்கள். வெறி கொண்டு அவர் நடத்தும் தாக்குதலில் விமான நிலையமே அல்லோலப்படுகிறது. அவரது மனைவி வந்து அவரை சமரசம் செய்ய முயற்சிக்கிறார். சரி பிரச்சனை முடிந்து விட்டது என்று பார்த்தால், அவரை சமரசம் செய்து விட்டு அந்தம்மா, ரகளையில் ஈடுபடத் தொடங்குகிறார். கணவருக்கு ரெஸ்டு கொடுத்திருப்பார் போலும். அவராவது தடுப்புகளை எடுத்து அடித்தார், இந்தம்மா... கைகளாலே மேஜையை அடித்து ரகளை செய்கிறார். ஒரு கட்டத்தில் தன்னை விட தன் மனைவி உச்ச கோபத்திற்கு சென்று விட்டார் என்பதை அறிந்த அந்த கணவர்... அவரை சமரசம் செய்கிறார்.


என்ன அவசரத்தில் அவர்கள் செல்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். அவ்வாறு திட்டமிடும்போது அங்கு விமானம் ரத்து செய்யப்படும் போது, இது மாதிரியான மோதல்கள் அங்கிங்குமாய் எங்காவது நடைபெறும். அது பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் தான் என்பதால் இதை நாம் ரசிப்பதோடு நகர்ந்துவிடுவது நல்லது. இங்கே அப்ளை செய்ய நினைத்தால், விமானம் ரத்தான இழப்போடு, சிறைவாசமும் வந்துவிடும் என்கிற புரிதல் நமக்குள் இருப்பதால் தான்.