ரஷ்யாவில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் ரூ.7.47 கோடி மதிப்பிலான முகமற்ற ஓவியத்தில், தனது கையில் இருந்த பேனாவின் மூலம் கண்களை வரைந்தப் பாதுகாவலர், பணிக்கு சேர்ந்த முதல் நாளே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


ஓவியங்கள் என்றாலே மனதிற்கு இதமாகவும், மகிழ்ச்சியளிக்கும் விதமாக அமைவது தான். எத்தனை துன்பங்கள் மனதில் இருந்தாலும் வித்தியாசமாக ஒவியங்களை ரசிக்கும் போது அத்தனையும் அடியோடு பறந்துவிடும். சில சமயங்களில் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் நமக்கு பிடித்த ஓவியங்களை வாங்குவோம். அல்லது ஏலத்தில் எடுப்போம். ஆனால் இதுப்போன்று எல்லாம் எதுவும் இல்லாமல் ரஷ்யாவில் நடந்த ஓவியக்கண்காட்சியில் விநோத சம்பவம் நடந்துள்ளது.





மேற்கு-மத்திய ரஷ்யாவின் Sverdlovsk ஒப்லாஸ்ட் பகுதியில் உள்ள Yeltsin மையத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்றுள்ளது. இதில் பிரபல ஓவியக்கலைஞர்கள் பலர் வரைந்த ஓவியங்கள் பல இடம் பெற்றிருந்தன. அதில் குறிப்பாக புகழ்பெற்ற ஓவியர் Anna Leporskaya வரைந்த ஓவியம் இடம் பெற்றிருந்ததது. முகமற்ற மூன்று உருவங்கள் கொண்ட இந்த ஓவியம் $1 மில்லியன் டாலர் (ரூ.7.47 கோடி) மதிப்பிலானதாக இருந்தது.


இந்த ஓவியத்தை மக்கள் பெரும்பாலோனர் பார்த்து ரசித்து வந்த நிலையில் தான், அக்கண்காட்சி மையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 60 வயதான காவலர் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன செய்தார் தெரியுமா? பணிக்குச் சேர்ந்த முதல் நாள் என்பதால், அவருக்கு கொஞ்சம் சலிப்பாக இருந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று யோசித்து வந்த நேரத்தில் தான், தன் கையில் இருந்த பால் பாயிண்ட் பேனா வை வைத்து, ஓவியர் Anna Leporskaya வரைந்த முகமற்ற ஓவியத்தில் கண்களை வரைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


அந்த ஓவியத்தில் மூன்று முகங்கள் இருந்த நிலையில், இரண்டு முகங்களில் கண்களை வரைந்துள்ளார். இதனைப்பார்த்த அதிகாரிகள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என கேள்வி எழுப்பியதோடு, பணிக்கு சேர்ந்த முதல்நாளே பாதுகாவலாளியை பணியிலிருந்து நீக்கம் உத்தவிட்டனர். மேலும் இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் குற்றம் நிரூபணமானால் ரூ. 40 ஆயிரம் வரை அபராதமும், ஒரு வருட தண்டனையும் வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.





மேலும் இந்த ஓவியத்தின் சேத மதிப்பு ரூ 2,49,500) என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், கலைப்படைப்பின் மதிப்பு எவ்வளவு என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் இந்த முகமற்ற ஓவியத்திற்கு ஆல்பா இன்சுரன்ஸ் நிறுவனத்தில் ரூ.7.47 கோடி அளவிற்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்தையடுத்து சேதமடைந்த ஓவியத்தை மறுசீரமைக்கும் பணிகளில் வல்லுநர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இதில் ஓவியத்தில் எந்தவித சேதமும் இல்லாமல் மறு சீரமைக்கப்படும் எனவும் அதற்கானப் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.