அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள ஏரியில் இரண்டு இந்திய மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன மாணவர்களின் உடல்கள் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது வம்சாவளி இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் தொடரும் மர்மம்:


கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி, சித்தாந்த் ஷா (19), ஆர்யன் வைத்யா (20) ஆகிய மாணவர்கள் இண்டியானாபோலிஸ் நகரின் தென்மேற்கே சுமார் 64 மைல் தொலைவில் உள்ள மன்ரோ ஏரிக்கு நண்பர்களுடன் சென்றனர். ஆனால், அவர்கள் திரும்பி வரவே இல்லை. இரண்டு மாணவர்களும் இந்தியானா பல்கலைக்கழகத்தின் கெல்லி ஸ்கூல் ஆஃப் பிசினஸில் கல்வி பயின்று வந்துள்ளனர். 


இதையடுத்து, ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அவர்கள் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. கடுமையான வானிலை காரணமாக தீவிர தேடுதல் வேட்டை தடைபட்டது. பின்னர், அவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 18 ஆம் தேதி, தேடுதல் குழுவினரால் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டன.


ஷாவும் வைத்யாவும், ஏரியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போதுதான், இந்த சம்பவம் நடந்துள்ளது. நீந்தி கொண்டிருந்தபோது, ஏரியில் இருவரும் மூழ்கினர். நண்பர்கள் அவர்களுக்கு உதவ முயன்றனர். ஆனால், முடியவில்லை.


காணாமல் போன மென்பொருள் பொறியாளர்:


நேற்று முன்தினம், அமெரிக்க மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஏரியில் இந்திய அமெரிக்க வம்சாவளி மென்பொருள் பொறியாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இவர், கடந்த 9ஆம் தேதி காணாமல் போயுள்ளார். மேரிலாந்து ஜெர்மன் நகரில் உள்ள சர்ச்சில் ஏரியில் அங்கித் பாகாயின் உடலை அதிகாரிகள் கண்டெடுத்தனர். ஏரியில் ஒருவரின் உடல் மிதந்து கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் கவனித்துள்ளனர்.


இதையடுத்து, அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மாண்ட்கோமெரி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கடந்த 9ஆம் தேதி காலை 11.30 மணியளவில், மைல்ஸ்டோன் பிளாசாவுக்கு அருகிலுள்ள ஒரு சிகிச்சை மையத்தை விட்டு வெளியேறியபோது அங்கித் பாகாயை கடைசியை கண்டுள்ளனர். அதன் பிறகு, அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.


சமீபத்தில், அமெரிக்க விமான நிலையத்தில் காத்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்தார். பாஸ்டனில் உள்ள லோகன் சர்வதேச விமான நிலையத்தில் நண்பருக்காக காத்திருந்தபோது பேருந்து மோதியதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 47 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


உயிரிழந்தவர் விஸ்வசந்த் கொல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் டகேடா மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்தவர். இந்த சம்பவம் மார்ச் 28 அன்று மாலை 5 மணியளவில் நடந்தது. 


மேலும் படிக்க: Abortion Pill : கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த அனுமதி.. உச்சநீதிமன்றம் அதிரடி..!