ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியது முதல் உலகம் முழுவதும் அந்த நாட்டு மக்களின் நிலை கண்டு மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சியையையும் நிறுவவதாக அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
தலிபான்களின் கடந்த கால ஆட்சியின் காரணமாக அவர்கள் மீது நம்பிக்கையில்லாத மக்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால், தலிபான்கள் நாட்டை கைப்பற்றியது முதல் காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்து வருகின்றனர். தற்போது வரை அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காபூலில் உள்ள ஹமீத்கர்சாய் விமான நிலையம் உள்ளது.
இந்த நிலையில், இன்று காபூல் விமான நிலையத்திற்கு வெளியே திடீரென இரண்டு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மக்கள் கூட்டமாக நின்ற இடத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பினால் கரும்புகை சூழந்ததுடன் மக்கள் பலரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இரு குண்டு வெடிப்பு சம்பவத்தால் மக்கள் பலரும் தூக்கி வீசப்பட்டனர். பலரும் உயிரிழந்தனர்.
சற்றுமுன் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்த வெடிகுண்டு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் முதல் 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 52 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள் இந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் பலரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பே மேற்கத்திய நாடுகள், காபூல் விமான நிலையத்தில் வெடிகுண்டு விபத்திற்கு வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. காபூல் விமான நிலையத்திற்கு தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக பல நாட்டு விமானங்களும் வந்து செல்வதால், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் எச்சரித்திருந்தனர்.
இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக, தகவல் தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் விமான நிலையத்தின் நுழைவு வாயிலிலும், மற்றொரு குண்டு வெடிப்பு அங்கிருந்த ஹோட்டலில் இருந்து சற்று தொலைவிலும் நடந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஒரு கைக்குழந்தையும் உயிரிழந்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அங்குள்ள ஊடகங்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிக் ஸ்டேட் (Islamic State) அமைப்பினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கா அதிகாரி ஒருவர் அசோஸியேட் பிரஸ் செய்தி தளத்திடம் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைக்கும் மக்களை ஏற்கனவே தலிபான்கள் தடுத்து நிறுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள வெளிநாட்டு மக்கள் தங்களது நாடுகளுக்கு திரும்புவதற்காகவும், ஆப்கான் மக்கள் பிற நாடுகளில் தஞ்சம் அடைவதற்காகவும் தினசரி விமான நிலையத்தில் கவிந்து வருகின்றனர்.