அர்மேனிய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் இணையத்தில் வைரலாகி வருகிறது.


அர்மேனியா, கிழக்கு ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நாடு. இதன் எல்லைப் பகுதிகளாக மேற்கே துருக்கி, வடக்கே ஜார்ஜியா, கிழக்கே  அசர்பைஜான், தெற்கே ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன. 


சோவியத் ரஷ்யாவில் இருந்த அர்மேனியா முதன்முதலில் 1991 செப்டம்பரில் தான் சுதந்திர நாடானது. ஆனால், அண்டைநாடான அஜர்பைஜானுடன் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்தது.  1994 ஆம் ஆண்டில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா இரண்டும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டபோது, 30,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்தள்ளனர்


2018 ஆர்னேனியப் புரட்சி என்பது ஆர்மீனியாவில் ஏப்ரல் முதல் மே 2018 வரை ஆர்மீனிய பாராளுமன்ற உறுப்பினர் நிகோல் பாஷின்யன் (சிவில் ஒப்பந்தக் கட்சியின் தலைவர்) தலைமையிலான பல்வேறு அரசியல் மற்றும் சிவில் குழுக்களால் நடத்தப்பட்ட அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும்.


பின்னர் மார்ச் 2018ல், அர்மேனியாவின் புதிய அதிபரானார் ஆர்மென் சர்க்ஸயன். அப்போது அர்மேனிய நாடாளுமன்றத்தில் அதிபரின் அதிகாரம் குறைக்கப்பட்டும், பிரதமரின் அதிகாரம் கூட்டப்பட்டும் சட்டம் இயற்றப்பட்டது. மே 2018 இல், நாடாளுமன்றம் எதிர்க்கட்சித் தலைவர் நிகோல் பஷின்யனை புதிய பிரதமராக தேர்ந்தெடுத்தது.


2020ல் மீண்டும் அர்மேனியா, அஜர்பைஜான் மோதல் வெடித்தது. ஆனால், சில நாட்களிலேயே அர்மேனியா பின்வாங்கியது. 44 நாட்கள் நடந்த இந்தப் போரில் அர்மேனியாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.  




இந்நிலையில் அர்மேனியா நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமையன்று அமளி ஏற்பட்டது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நாட்டின் முந்தைய பாதுகாப்பு அமைச்சர்களை நம்பிக்கை துரோகிகள் எனக் குறிப்பிட்டு கூச்சல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அவைத் தலைவரை நோக்கி பாட்டில்கள் தூக்கி வீசப்பட்டன. ஒருவருக்கொருவர் கைகலப்பிலும் ஈடுபட்டனர். அவைக்காவலர்கள் வந்து மோதலை முடிவுக்குக் கொண்டுவந்தனர். அர்மேனிய நாடாளுமன்ற சர்ச்சை இணையத்தில் வைரலாகி வருகிறது.


கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அர்மேனியா நாட்டு நாடாளுமன்றத்தில் மூன்று முறை மோதல் ஏற்பட்டுள்ளது.


அந்தவகையில், நேற்று ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று எதிர்க்கட்சி உறுப்பினரான வாஹே ஹகோபியன், நாட்டின் பிரதமர் நிக்கோல் பாஷ்னியானை மிகக் கடுமையாக விமர்சித்தார். பிரதமர் நிக்கோல் ஒரு பொய்யர் என்றும் பொய்ப் பிரச்சாரங்களால் போலியான வாக்குறுதிகளால் மக்களிடம் பிரபலமடைந்ததாகக் கூறினார். இதனால், சிவில் கான்ட்ராக்ட் கட்சியைச் சேர்ந்த ஹெய்க் சர்க்ஸியான் பாட்டில்களை தூக்கி வீசினார்.இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த அவையும் அமளியில் ஈடுபட்டது.