கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தானை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றியதால் அவர்களது ஆட்சிமுறைக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினார். குறிப்பாக, நாட்டின் தலைநகரான காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் விமான நிலையத்தில் மக்கள் குவியத் தொடங்கினார்.
அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விமான நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் உணவும், குடிநீர் அநியாய விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
பிரபல ஆங்கில பத்திரிகையான ராய்டர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், காபூல் விமான நிலையத்தில் குடிநீரும், உணவும் அதிகவிலைக்கு விற்கப்படுவதாக ஆப்கானைச் சேர்ந்த பஷல் உர் ரஹ்மான் என்பவர் கூறியுள்ளார். ஒரு பாட்டில் குடிநீர் விலை 40 டாலருக்கு விற்கப்படுகிறது. ஒரு சாப்பாடு 100 டாலருக்கு விற்கப்படுகிறது. இது சாதாரண மக்களுக்கு எட்டாதது என்றும் அவர் கூறினார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதுவும் இந்த விலையானது ஆப்கான் நாட்டு பணத்தில் விற்கப்படாமல், டாலர் மதிப்பில் விற்கப்படுகிறது.
இந்திய மதிப்பில் ஒரு குடிநீர் பாட்டில் விலை ரூபாய் 2 ஆயிரத்து 968-க்கும், ஒரு சாப்பாடு ரூபாய் 7 ஆயிரத்து 421-க்கும் விற்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டின் பணத்தை ஆப்கானி என்று அந்த நாட்டு மக்கள் அழைக்கின்றனர். இதன்படி, ஒரு பாட்டில் குடிநீர் 3 ஆயிரத்து 197 ஆப்கானிக்கு விற்கப்படுகிறது. ஒரு சாப்பாடு 7 ஆயிரத்து 992 ஆப்கானிக்கு விற்கப்படுகிறது. இந்த கடுமையான விலை உயர்வுக்கு பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே அந்த நாட்டில் நிலவி வரும் சூழலினால் மக்கள் மிகவும் வேதனையில் அவதிப்பட்டு வருகின்றனர். நாட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான சூழலில் வாழ வேண்டும் என்று நினைத்து, காபூல் விமான நிலையத்திற்கு வரும் மக்களுக்கு இந்த விலை என்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபோது, ஒட்டுமொத்த உலகமும் வேதனைக்கு ஆளானது, அந்த நாட்டில் சிக்கிக்கொண்ட பிற நாட்டு மக்களை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் மீட்டது. ஆனால், அதே நாட்டினர் தங்களை காப்பாற்றிக்கொள்ள வழியின்றி பிற நாட்டிற்கும், அருகில் உள்ள நாட்டிற்கும் தஞ்சம் புகும் அவல நிலை ஏற்பட்டது. அமெரிக்க ராணுவ விமானத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக தப்பிச்சென்ற புகைப்படம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது. மேலும், அமெரிக்க ராணுவ விமானத்தின் டயரை பிடித்துக்கொண்டு காபூல் விமான நிலையத்தில் இருந்து அந்த நாட்டு மக்கள் தப்பிச்சென்ற வீடியோ உலகம் முழுவதும் மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது.