உலகின் நான்காவது பணக்காரர் மற்றும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் லிங்க்ட்இனில் 1974ல் தான் உருவாக்கிய வேலை தேடலுக்கான விண்ணப்பத்தை (Resume) பகிர்ந்துள்ளார்.


"நீங்கள் சமீபத்திய பட்டதாரியாக இருந்தாலும் அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவராக இருந்தாலும் சரி, 48 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்ததை விட உங்கள் ரெஸ்யூம் மிகவும் நன்றாக இருக்kum என்று நான் நம்புகிறேன்," என்று கேட்ஸ் தனது 18 வயதில் அவர் எழுதிய ரெஸ்யூமைப் பகிர்ந்துகொண்டார்.


கேட்ஸ் ஹார்வர்டில் தனது முதல் ஆண்டில் எழுதிய ரெஸ்யூம் அது. அவர் தனது நோக்கத்தை "சிஸ்டம்ஸ் அனலிஸ்ட் அல்லது சிஸ்டம்ஸ் புரோகிராமர்" என்று அதில் பட்டியலிட்டுள்ளார்.


இதில் சுவாரஸ்யமாக, அவர் தனது உயரம் மற்றும் எடையையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


அவர் ஹார்வர்டில் இயங்குதள அமைப்பு, தரவுத்தள மேலாண்மை, கம்பைலர் கட்டுமானம் மற்றும் கணினி வரைகலை (operating systems structure, database management, compiler construction, and computer graphics) போன்ற படிப்புகளை எடுத்ததாக விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.






ஃபோர்ட்ரான், அல்கோல், பேசிக் போன்ற கம்ப்யூட்டர் மொழிகளில் அவரது அனுபவத்தையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கேட்ஸ் 1973ல் TRW  சிஸ்டம்ஸ் குழுமத்தில் சிஸ்டம்ஸ் புரோகிராமராக வேலை பார்த்த தனது அனுபவத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார். 1972ல் சியாட்டில், லேக்சைட் பள்ளியில் இணை பங்குதாரராக இருந்த தனது அனுபவத்தையும் அதில் சேர்த்துள்ளார்.


பில் கேட்ஸின் ரெஸ்யூம் குறித்து சிலர் கமெண்ட் செய்துள்ளனர். அதில்,


ஒரு பயனர், "ஒரு பக்க ரெஸ்யூம் அருமை. நாம் அனைவரும் திரும்பிச் சென்று பார்க்க நமது கடந்தகால ரெஸ்யூம்களின் நகல்களை வைத்திருக்க வேண்டும். சில சமயங்களில், நம் வாழ்வில் நாம் எவ்வளவு சாதித்துள்ளோம் என்பதை மறந்து விடுகிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.


மற்றொருவர், "இது 48 வருடம் பழமையான ரெஸ்யூம் என்று சொன்னாலும் இன்றும் அழகாக இருக்கிறது!!" எனக் குறிப்பிட்டுள்ளார்.


மூன்றாவது பயனர், "உங்கள் பெயர் வில்லியமா? வில்லியம் என்பதன் சுருக்கம் பில் என்பதைக் கண்டறிய எனக்கும் சிறிது நேரம் பிடித்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.