தன் முன்னாள் மனைவி மெலிண்டா பிரென்ச் கேட்ஸுடனான தனது திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருந்ததாகவும், அவரை மீண்டும் திருமணம் செய்துகொள்ளவே தான் விரும்புவதாகவும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
சுமார் 30 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் இந்தத் தம்பதியினர் தங்கள் விவாகரத்தை அறிவித்திருந்தனர். தங்கள் விவாகரத்தைக் கடந்த 2021ஆம் ஆகஸ்ட் மாதம் உறுதி செய்த போதும், இருவரும் தங்கள் அறக்கட்டளையான, `பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபௌண்டேஷன்’ அமைப்பைச் சேர்ந்தே நடத்தப் போவதாகவும் அறிவித்திருந்தனர். பில் கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதியினருக்கு ஜென்னர், ரோரி, ஃபோப் என்று மூன்று குழந்தைகள் உண்டு.
கடந்த மே 1 அன்று, நேர்காணல் ஒன்றில் பேசிய பில் கேட்ஸ் கடந்த 2 ஆண்டுகளாகத் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை நினைவுகூர்ந்துள்ளார். மேலும் அவர் கொரோனா பெருந்தொற்று, தன் விவாகரத்து ஆகியவற்றை விட, தனது குழந்தைகள் தன்னை விட்டுச் சென்றது துயரமாக இருந்ததாகக் கூறியுள்ளார். மேலும், தனது முன்னாள் மனைவியுடனான உறவின் சிக்கல்களைச் சரிசெய்ய முயன்று வருவதாகவும், தன் திருமண வாழ்க்கை முடிவடைந்த பிறகு தனக்கு ஏற்பட்டிருக்கும் துயரங்களைக் குறித்தும் பேசியுள்ளார் பில் கேட்ஸ்.
குழந்தைகள் வளர்ந்த பிறகு, வீட்டை விட்டு வெளியேறுவது ஒவ்வொருவரின் திருமண வாழ்க்கையிலும் ஏற்படும் பெரிய மாற்றம் எனக் கூறும் பில் கேட்ஸ், தன் வாழ்க்கையில் அத்தகைய மாற்றம் விவாகரத்தின் ரூபத்தில் வந்ததாகவும் கூறுகிறார். தன் திருமண வாழ்க்கை முடிவடைந்திருந்தாலும், தன் பார்வையில் தன் திருமண வாழ்க்கை மிகச் சிறந்த ஒன்று எனவும் பில் கேட்ஸ் கூறியுள்ளார். `வாய்ப்பு கிடைத்தால், கடந்த காலத்திற்குச் சென்று நான் இதனை மாற்ற மாட்டேன்; வேறு ஒருவரைத் திருமணம் செய்ய தேர்ந்தெடுக்க மாட்டேன்’ எனக் கூறியுள்ளார் பில் கேட்ஸ்.
மேலும், அவர், `நான் மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ளவே விரும்புகிறேன். எனக்கு எதிர்காலத் திட்டம் எதுவும் இல்லை. ஆனால் நான் நிச்சயமாக திருமணத்தைப் பரிந்துரைக்கிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பில் கேட்ஸ், தனது விவாகரத்து குறித்து தான் ஏற்றுக் கொண்டு விட்டாரா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை என ஒப்புக் கொண்டுள்ளார். எனினும், தன் முன்னாள் மனைவியோடு பணியாற்றுவது தனக்கு நேர்ந்த அதிர்ஷ்டம் எனக் கூறுகிறார் பில் கேட்ஸ். `ஃபௌண்டேஷனில் பணியாளர்களுக்கான வருடாந்திர சந்திப்பை நானும், அவரும் இணைந்தே நடத்துகிறோம்’ எனக் கூறுகிறார் பில் கேட்ஸ்.
தன் விவாகரத்தின் பாதிப்பில் இருந்து இருவருமே மீண்டு வருவதாகவும் இந்த நேர்காணலில் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.