கடந்த சில நாட்களாக நாலாபுறமும் வைரலில் இருக்கும் நபர் எலான் மஸ்க். கடந்த மாதம் ட்விட்டரின் 9 சதவீத பங்குகளை வாங்கினார் எலான். இதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குழு உறுப்பினராக இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நிர்வாக போர்டு உறுப்பினர் குழுவின் இணைய மறுத்த எலான், இன்றைய தேதிக்கு ட்விட்டரை விலைக்கு வாங்கிவிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாக ட்விட்டருக்கு இந்தியா மற்றும் அமெரிக்காவில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் ட்விட்டரை வாங்குவதற்கு சில நிறுவனங்கள் போட்டிப் போட்டுகொண்டு வந்தன. ஆனால், இறுதியில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கிவிட்டார். இது ஒருபுறமிருக்க எலான் மஸ்கை பின் தொடரும் கணக்குகளில் பாதிக்குபாதி போலியானவை என குறிப்பிட்டுள்ளது ட்விட்டர்.
ட்விட்டர் கணக்குகளை ஆராயும் SparkToro என்ற டூல் இந்த விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது எலான் மஸ்கை 90 மில்லியன் பேர் பாலோ செய்கின்றனர். அதாவது 90 மில்லியன் கணக்குகள்.அதில் பாதிக்குப்பாதி போலிக்கணக்குகள். அதாவது 40 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் போலி. ட்விட்டரில் ஆக்டீவாகவே இல்லாத கணக்குகள், ஸ்பேம் கணக்குகள் போன்ற ட்விட்டர் கணக்குகள் இந்த போலி கணக்கில் வருகின்றன.
எலான் மஸ்குக்கு மட்டுமின்றி, பில் கேட்ஸ் மற்றும் பராக் ஒபாமாவை பாலோ செய்யும் கணக்குகளிலும் பாதிக்குபாதி போலி கணக்குகள் தானாம். பில் கேட்ஸை 46% பேரும், ஒபாமாவை 44% பேரும் போலியாக பின் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ட்விட்டர் குறித்து பதிவிட்ட எலான், 'சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகம் செயல்படுவதற்கான அடிப்படையான ஒன்று. டிவிட்டர் என்பது ஒரு டிஜிட்டல் ஸ்பேஸ், மனிதர்களின் எதிர்காலம் குறித்து விவாதிக்க வேண்டிய ஒன்று. ட்விட்டரில் பல புதிய மாற்றங்களை கொண்டுவரவே அதை வாங்கினேன். ட்விட்டர் அசாதாரணமான ஒன்று. நிறுவனத்துடனும் புதிய அப்டேட்களை மேற்கொள்ள ஆவலாக இருக்கிறேன். இந்த புதிய சிறப்புகள் ட்விட்டர் பயன்களுக்கு கிடைக்க ஒன்றிணைந்து செயல்படுதை எதிர்நோக்கி இருக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.