அமெரிக்க சிறப்பு படைகள் வியாழன் இரவு வடமேற்கு சிரியாவில் பெரிய அளவிலான பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். மேற்கு சிரியாவில் அமெரிக்கப்படையின்  தொடர் தாக்குதல் குறித்து அங்கிருந்து மக்களிடமிருந்து தொடர் புகார் வெளிவந்த நிலையில் அமெரிக்க அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்கப் படைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 






அவரின் அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அதில், "அமெரிக்க மக்களையும் எங்களது நட்பு நாடுகளையும் பாதுகாக்க, உலகைப் பாதுகாப்பான இடமாக மாற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது" என்று விவரித்துள்ளார்.








இந்த நடவடிக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தற்போதைய தலைவரான அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி  என்பவர் “போர்க்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்(Taken off the battle field)" என்று பைடன் குறிப்பிட்டுள்ளார். இதில் பங்கேற்ற அனைத்து அமெரிக்கப் படைகளும் பத்திரமாகத் திரும்பியதையும் அவர் உறுதிப்படுத்தினார். இந்தத் தாக்குதல் குறித்து வியாழன் அன்று அமெரிக்க மக்களிடம் பேசவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அவரது அறிக்கையில் பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.


மேலும் இந்தத் தாக்குதல் குறித்துப் பதிவு செய்துள்ள சிரிய கண்காணிப்புக் குழு, அல் குரேஷியின் வசம் இருந்த வெடிகுண்டுகள் அவரது குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்களது பதிவில், "இந்த நடவடிக்கையின் முடிவுகளை நாங்கள் ஆய்வு செய்யும்போது, ​​2019ம் ஆண்டு நடவடிக்கையில் நாங்கள் பார்த்த அதே கோழைத்தனமான பயங்கரவாத தந்திரம்தான், அல்-குரேஷிக்கு முன்பிருந்த தலைவரை அழித்தது" என்று குறிப்பிட்டுள்ளனர். 


2019 அக்டோபரில் அப்போதைய ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவராக இருந்த அபு பக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதற்குப் பிறகு நடந்த மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை இது என்று அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் விவரித்துள்ளனர்.