பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரலாற்று சிறப்புமிக்கது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 


பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக்கிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இது பிரம்மிக்க வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின் போது பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில், “ பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து செய்தி வெளியாகியுள்ளது. மகிழ்ச்சி. நாளை அரசர் சார்லஸை ரிஷி சந்திக்க உள்ளார். இது பிரம்மிக்க வைக்கிறது.” என்று ரிஷி சுனகிடன் பேசுவதற்கு பைடன் ஆர்வமுடன் இருப்பதாகவும், பிரிட்டன் உடனான நல்லுறவும் ஆதரவும் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன.


வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்:


அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திங்கள் கிழமை நடைபெற்ற கொண்டாட்டத்தில் அதிபர் ஜோ பைடன்,ஜோ பைடன் மனைவி ஜில் பைடன்,  துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியர் அமெரிக்கர்களும் விழாவில் பங்கேற்றனர்.


இம்முறை வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை முன் எப்போதும் இல்லாத அளவில் பிரம்மாண்டமாக பல்வேறு ஏற்பாடுகள் உடன் கொண்டாடப்பட்டது. 


வெள்ளை மாளிகையில் பேசிய  ஜோ பைடன், " வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்ட்டத்தை நடத்தியதில் பெருமை கொள்கிறோம். இம்முறை தீபாவளி கொண்டாட்டம் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்ததில் மகிழ்ச்சி. தீபாவளி கொண்டாட்டம் அமெரிக்க கலாச்சாரத்தின் ஒருபகுதியாக மாறிவிட்டது. இதை அறிமுகம் செய்ததற்கு இங்கு வாழும் ஆசிய மக்களுக்கு  நன்றி தெரிவிக்கிறோம்.  உங்களுக்கு விருந்தளிப்பதில் பெருமையடைகிறோம்.” என்று கூறினார்.






துணை அதிபர் கமலா  ஹாரிஸ் கூறுகையில், வெள்ளை மாளிகை மக்களுக்கானது; அதிபரும், அவரது மனைவியும் வெள்ளை மாளிகையில் அமெரிக்கர்கள் அவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பெருமையுடன் கொண்டாடுவதை விரும்புகின்றனர்.” என்று தெரிவித்தார்.


பிரிட்டனின் இளம்வயது பிரதமர்:


பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் தோல்வி அடைந்த இரண்டே மாதத்தில் மீண்டும் பிரதமர் பதவிக்கான போட்டியில் குதித்து தற்போது பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக். சிறு வயதிலிருந்து அரசியல் வாழ்க்கை வரை அனைவரையும் வியக்க வைக்கிறார் ரிஷி சுனக்.


ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டங்களை பெற்ற ரிஷி, கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். பின்னர், பிரிட்டன் நிதியமைச்சராக பொறுப்பு வகித்தபோது, கொரோனா பொருளாதார மீட்பு திட்டத்தை அறிவித்து வெகுவான பாராட்டை பெற்றார்.


பிரிட்டன் அரசியல்வாதிகளிலேயே பணக்காரர்களில் ஒருவராக உள்ள ரிஷி, இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2009ஆம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. 


கடந்த 1980ஆம் ஆண்டு, மே 12ஆம் தேதி, சவுத்தாம்ப்டனில் குடியேறிய இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர் ரிஷி சுனக். அவரது பெற்றோர் யஷ்வீர் மற்றும் உஷா, இருவரும் மருந்தாளுநர்கள் ஆவர். கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்கள். பஞ்சாபை பூர்வீகமாக கொண்டவர்கள்.


சுனக்கின் தந்தைவழி தாத்தா பாட்டி இப்போது பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலா என்ற இடத்திலிருந்து வந்தவர்கள். இருப்பினும், 1930 களில் நடந்த மதக் கலவரம் காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


சுனக் தனது பள்ளிப் படிப்பை வின்செஸ்டர் கல்லூரியில் முடித்தார். இங்கு படித்த ஆறு பேர் நிதியமைச்சர்களாகி உள்ளனர். கோடை விடுமுறையில் சவுத்தாம்ப்டனில் உள்ள இந்திய உணவகத்தில் பணியாளராகவும் ரிஷி பணியாற்றினார். பின்னர், அவர் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சென்றார்.


2001 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்ட் பல்கைலக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, கோல்ட்மேன் சாச்ஸின் ஆய்வாளராக ஆனார். 2004 வரை முதலீட்டு வங்கி நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர், அவர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார். அங்குதான், அவர் தனது மனைவி அக்சதா மூர்த்தியை சந்தித்தார்.