தனி மனித சுதந்திரத்தின் தாயகமாக உள்ள ஐரோப்பிய நாடுகள், பல முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உலகுக்கே முன்னுதாரணமாக உள்ளது. அந்த வகையில், ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வியப்பை ஏற்படுத்திய பெர்லின்:
பெர்லினில் உள்ள பொது நீச்சல் குளங்களில் உள்ள அனைவரும் விரைவில் மேலாடையின்றி நீச்சல் அடிக்க அனுமதிக்கப்பட உள்ளனர் என அந்நகரின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். திறந்தவெளி நீச்சல் குளத்தில் மேலாடை இன்றி சூரிய குளியல் எடுத்ததால் அங்கிருந்து ஒரு பெண் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அந்த பெண் சட்ட போராட்டத்தில் ஈடுபட, இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆண்களைப் போலவே பெண்களும் தாங்கள் விருப்பப்பட்டால், பொது நீச்சல் குளங்களில் மேலாடையின்றி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என செனட்டின் புகார் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெண் அளித்த புகார்:
பெர்லின் அதிகாரிகள் அவர்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பதை ஒப்புக்கொண்டு, பெர்லினின் குளங்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் இனி மேலாடையின்றி செல்ல உரிமை பெற்றுள்ளனர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் எதிரொலியாக, நகரின் பொது குளங்களை பராமரித்து வரும் பெர்லினர் பேடர்பெட்ரீப், அதன் ஆடை விதிகளையும் அதற்கேற்ப மாற்றியுள்ளது.
இதுகுறித்து புகார் அலுவலகத்தின் தலைவர் டோரிஸ் லிப்ஷர் கூறுகையில், "பேடர்பெட்ரீப்பின் முடிவை புகார் அலுவலகம் முழுவதுமாக வரவேற்கிறது. ஏனெனில், அது ஆண், பெண் அல்லது பிற பாலினத்தவர் என அனைத்து பெர்லினர்களுக்கும் சம உரிமைகளை வழங்குகிறது. இது நீச்சல் குள ஊழியர்களுக்கு சட்டரீதியான உறுதியையும் உருவாக்குகிறது.
தற்போது, ஒழுங்குமறையை முறையாக அமல்படுத்துவது அவசியம். இனி, தடை விதிக்கவோ வெளியேற்ற உத்தரவுகளையோ பிறப்பிக்க கூடாது" என்றார்.
குளியல் விதிகள் மாற்றம்:
புதிய குளியல் விதிகள் எப்போது அமலுக்கு வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இந்த முடிவை ஜெர்மனியின் சுதந்திர உடல் கலாச்சார அமைப்பு வரவேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலினம் கடந்து, நிர்வாணம் தொடர்பான விவகாரங்களில் ஜெர்மனி அனைவரிடத்திலும் தாராளவாத போக்கை கடைபிடித்து வருகிறது. ஆனால், நகராட்சி நீச்சல் குளங்களில் எந்தளவுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பது சிக்கலாக இருந்து வந்தது.
கடந்த ஆண்டு, நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள சீஜென், லோயர் சாக்சனியில் உள்ள கோட்டிங்கன் உள்ளிட்ட பல நகரங்களில் பொதுக் குளங்களில் மேலாடையின்றி குளிக்க அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அதே ஆண்டு, லோயர் சாக்சனி மாநிலத்தின் தலைநகரான ஹனோவரில் குளியல் விதிமுறைகளை மாற்றப்பட்டது. முதன்மை பாலின உறுப்புகளை மறைக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.