பெலாரஸின் பத்திரிகையாளரும், பதிவருமான ரோமன் ப்ரோடஸேவிச் என்பவரை அந்த நாட்டு அரசு கைது செய்திருக்கிறது. அந்த நாட்டு தேர்தலில் நடந்த சர்ச்சையை அடுத்து அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை பெலாரஸ் அரசு கைது செய்த விதம்தான் அனைவரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.






அண்மையில் க்ரீஸ் தலைநகர் ஏதன்ஸிலிருந்து லிதிவேன்யா தலைநகர் விலினியஸுக்கு ரோமன் பயணம் செய்தார். அவர் பயணம் செய்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் வந்ததை அடுத்து விமானம் பெலாரஸில் தரையிறக்கப்பட்டது.


ரோமனும் அவரது நண்பர் ஸ்டீபன் புட்டில்லோவும் இணைந்து நெக்ஸ்டா டெலிகிராம் என்கிற ஒரு சேனலை நடத்தி வந்தனர். அந்த சேனலின் வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தினர்தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்துமுடிந்த சர்ச்சைக்குரிய தேர்தலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தபோராட்டத்தில் ஆயிரக்கணக்கிலானவர்கள் கைது செய்யப்பட்டார்கள் பலர் இறந்தனர். அந்த நாட்டில் ஏற்பட்ட தேர்தல் நெருக்கடியை அடுத்து எதிர்க்கட்சித் தலைவரான ஸ்வெட்லீனா டிக்கனோவ்ஸ்கியா ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நாடுகடத்தப்பட்டார்.


இந்த நிலையில் 26 வயதான ரோமனும் அவரது நண்பர் ஸ்டீபனும் ஐரோப்பாவுக்குத் தப்பியோடினார்கள். அவர்கள் இருவரையும் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டதாக பெலாரஸ் அரசு அறிவித்தது. இதற்கிடையே அண்மையில் க்ரீஸ் தலைநகர் ஏதன்ஸிலிருந்து லிதிவேன்யா தலைநகர் விலினியஸுக்கு ரோமன் பயணம் செய்தார். அவர் பயணம் செய்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் வந்ததை அடுத்து விமானம் பெலாரஸில் தரையிறக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் விமானத்திலிருந்து பதட்டத்துடன் வெளியேறிய நிலையில் தாவிப்பாய்ந்த பெலாரஸ் நாட்டு காவல்துறை அதில் இருந்த ரோமனைக் கைது செய்தது. இதையடுத்துதான் ரோமனைக் கைது செய்ய பெலாரஸ் அரசு இப்படியான வதந்தியைப் பரப்பியது தெரியவந்தது.விமானத்தில் பயணம் செய்த மக்களின் மனநிலையை கருத்தில் கொள்ளாமல் மேற்கொண்ட பெலாரஸ் அரசின் இந்த நடவடிக்கையை ஐரோப்பிய நாடுகள் கண்டித்து வருகின்றன. மேலும் அண்மைய தகவலின்படி கைது செய்யப்பட்ட ரோமன் தான் போராட்டத்தை நடத்த கூட்டத்தைச் சேர்த்ததாக ஒப்புக்கொள்ளும் வாக்குமூல வீடியோ ஒன்றை அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.  நெற்றியில் காயம் மற்றும் கைவிரல்கள் படபடக்க அவர் அளிக்கும் அந்த வாக்குமூலத்தை மிரட்டப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலம் என நாட்டின் பல்வேறு தரப்பினர் கருத்து பதிவு செய்து வருகிறார்கள்.அவரை விடுவிக்கும்படி நாடுகடத்தப்பட்ட எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.


பெலாரஸ் நாட்டு விதிகளின்படி அமைதியைக் குலைக்கும் வகையில் சட்ட ஒழுங்குக்கு எதிராக நடக்கும் தனிநபர்களுக்கு15 ஆண்டுகள் வரைச் சிறைதண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:ஏலத்தில் சாதனை; ரூ. 213 கோடி ஏலம் போன பர்பிள்-பிங்க் நிற சகுரா வைரக்கல்