கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சீனாவின் தலைநகர் பீஜிங், கடந்த 140 ஆண்டுகளில் மிக அதிக மழையைப் பதிவு செய்துள்ளது. சனிக்கிழமை மற்றும் புதன்கிழமை காலை இடையே 744.8 மில்லிமீட்டர் (75 செ.மி) மழை பதிவாகியுள்ளதாக பெய்ஜிங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரலாறு காணாத மழைபொழிவு
பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஹெபெய் மாகாணம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழைபொழிவு காரணமாக வெள்ள நீர் அபாயகரமான அளவுக்கு உயர்ந்துள்ளது. மழையால் சாலைகள் சேதமடைந்து மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் தலைநகரைச் சுற்றியுள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல கார்கள் தண்ணீரில் மூழ்கின.
கடுமையாக பாதிக்கப்பட்ட ஹெபெய் மாகாணம்
பெய்ஜிங்கின் தென்மேற்கே, எல்லையாக உள்ள ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான ஜுவோஜோ மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது. செவ்வாய்கிழமை இரவு, அந்த பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விளக்குகள் தேவை என்று சமூக ஊடகங்களில் போலீசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர். நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்துவருகின்றன.
8.5 லட்சம் பேர் இடம்பெயர்வு
புதனன்று, Zhuozhou எல்லையில், குவான் கவுண்டியில் தேங்கிய வெள்ள நீர், கண்காணிப்பு கேமரா நிறுவப்பட்ட கம்பத்தின் பாதி உயரம் வரை உயர்ந்தது. குவான் மாவட்டத்தில் வசிக்கும் லியு ஜிவென் என்று ஒருவர், செவ்வாய்க்கிழமை இரவு தனது கிராமத்திலிருந்து வெளியேறியதாக கூறியிருக்கிறார். அவர் அதைப்பற்றி கூறும்போது “எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை, இது இயற்கை பேரிடர்,'' என்று வலியுடன் கூறியுள்ளார். மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏறக்குறைய 8,50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஹெபெய் மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடக அறிக்கைகள் சொல்கின்றன.
140 ஆண்டுகளுக்கு முன் பெய்த மழை
செவ்வாய்க்கிழமை பெய்ஜிங்கைச் சுற்றி பெய்த மழையால் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், 27 பேர் காணவில்லை என்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 1891-ம் ஆண்டு பெய்த மழையில், நகரத்தில் 609 மில்லிமீட்டர் (61 செ.மி) மழை பெய்தது என்று பெய்ஜிங் வானிலை ஆய்வு மையம் கூறியது. ஆனால் இயந்திரங்களால் எடுக்கப்பட்ட துல்லியமான அளவீடுகள் 1883-ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. பெய்ஜிங்கின் புறநகர் மற்றும் அருகிலுள்ள நகரங்களில் அமைந்துள்ள பள்ளிகள் மற்றும் பிற பொது கட்டிடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாகாணங்களில் பேரிடர் நிவாரணத்திற்காக மத்திய அரசு 44 மில்லியன் யுவான் ($6.1 மில்லியன்) வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.