ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்ட சூழலில்  உலக நாடுகள் அங்கு நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் உற்றுநோக்கி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் செய்தி வாசிப்பாளர் ஒருவருக்கு தாலிபன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் கால் செய்த சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆஸ்த்திரேலியாவில் உள்ள பிபிசி வேல்ட்டின் செய்தி வாசிப்பாளராக இருந்து வருபவர்  யால்டா ஹக்கிம் (yaldahakim). இவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஆப்கானிஸ்தானில் பதற்றம் நிறைந்த நாளன்று நேரலையில் செய்தி வாசித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது லைவ்வில் இருக்கும் சமயத்தில் அவருக்கு ஒரு அழைப்பு வருகிறது. அதனை எடுத்து பேசியவருக்கு எதிர்முனையில் இருப்பவர் ஒரு தாலிபன் என்பது தெரிந்திருந்தது. ஏனெனில் முன்னதாக அந்த செய்தி வாசிப்பாளரிடம்தான் நாங்கள் பேச விரும்புகிறோம் என பிபிசி அலுவலகத்திற்கு தாலிபன்களின் அழைப்பு ஒன்று வந்திருந்தது. உடனே அலுவகலத்தில் இருந்து யால்டா ஹக்கிமை அழைத்து விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள். உடனே அலுவலகம் வாருங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். அப்படியான பதற்றத்தில் அவர் ஸ்டூடியோ வந்துள்ளார்.






செய்தி வாசிக்கும் சமயத்தின் இடையில் வரும் அழைப்பை ஏற்கும் யால்டாவிற்கு ஆரம்பத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் குழம்பி பின்னர் நிதானிக்கிறார். தொடர்ந்து துணிச்சலுடன் பேச ஆரமிக்கும் யால்டா ”நான் பேசுவது உங்களுக்கு கேட்கிறதா? சார் உங்களை குறித்து அறிமுகம் செய்துக்கொள்ளுங்களேன்” என்கிறார். உடனே எதிர்முனையில் இருக்கும் நபர் ” நான்தான் தாலிபன் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ‘சுஹைல் ஷஹீன்' பேசுகிறேன்” என்கிறார்.  சுஹைல் ஷஹீனுடன் ஒரு மாதிரியான பதற்றத்துடனே பேசும்  யல்டா அவரின் அழைப்பை மக்களும் கேட்கும்படியாக ஸ்பீக்கரில் கனெக்ட் செய்யும் வேலைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். பின்னர் பேசும் சுஹைல் 
 ”ஆப்கானிஸ்தான் நிலை குறித்து யாரும் எந்த குழப்பமும் அடைய வேண்டாம். காபூலில் உள்ள மக்களுக்கும், அவர்களுடைய சொத்துக்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. யாரையும் பழி வாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை, நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறோம். மூன்று பேர் விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழந்ததற்கு நாங்கள் காரணம் இல்லை, அமெரிக்காதான் அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். ஒரு சிறந்த அரசாங்கம் அமைய மற்ற நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்” என முன்னதாக  வரையறுத்து வைத்திருந்த தங்களில் நிலைப்பாட்டினை  நேரலையில் பகிர்ந்திருந்தார்.  30 நிமிடங்கள் பேசிய அந்த லைவ் போனோவை பலரும் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.



இவ்வளவு செய்தி வாசிப்பாளர்கள் இருந்தும் அவர்கள் ஏன் யால்டா ஹக்கிம்மை தேர்ந்தெடுத்தார்கள் என்ற சந்தேகம் வரலாம். யால்டா ஹக்கிம்மின் தாய்நாடு ஆப்கானிஸ்தான். 1980 களில் ஒரு கடத்தல் கும்பல் மூலம் அந்த நாட்டை விட்டு வெளியேறி பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஜெர்னலிஸம் படிப்பை தேர்வு செய்து படித்தார். யால்டா அந்த நாட்டை சார்ந்தவர் என்பதாலேயே அவரை தேர்வு செய்துள்ளனர் தாலிபன்கள்.   அத்தகைய பதற்றமான சூழலிலும் சாமர்த்தியமாக செயல்பட்ட யால்டா ஹக்கிமிற்கு தற்போது ட்விட்டரில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.