தலிபான் தாக்குதலில் இருந்து வெளிநாடு தப்பிச் சென்ற ஆஃப்கன் அதிபர் அஷ்ரப் கனி நேற்று முதன்முதலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தலிபான்கள் தலைநகர் காபூலை நெருங்கிய பிறகு ஒமானுக்கு அஷ்ரப் கனி தப்பியோடியதாகச் சொல்லப்பட்ட நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் அஷ்ரப் கனி அபுதாபியில் தஞ்சம் அடைந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. 


இதையடுத்து நேற்று இரவு தனது முகநூல் பக்கத்தில் அஷ்ரப் கனி அதிகாரபூர்வ்  வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆஃப்கன் தலிபான்களிடமிருந்து தப்பியோடிய பிறகு அவர் வெளியிட்ட முதல் வீடியோ அது. 



வீடியோவில் தான் நாட்டிலிருந்து தப்பியோடியதற்கான காரணத்தை விளக்கியிருக்கிறார் அஷ்ரஃப் கனி. ஒருவேளை தான் தலைநகரை விட்டு வெளியேறி இருக்காவிட்டால் பெருத்த ரத்தவெள்ளம் ஏற்பட்டிருக்கும் என்றும் அதனைத் தவிர்க்கவே அந்த முடிவை தான் எடுத்ததாகவும் அந்த வீடியோவில் பேசியுள்ளார். 


தனது நாட்டுக்கான தஜிகிஸ்தான் தூதுவர் குறிப்பிட்டிருப்பது போல தான் ஒன்றும் கோடிக்கணக்கான பணத்தை ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டு செல்லவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதையடுத்து தான் அமீரகத்தில் இருப்பதையும் உறுதிபடுத்தியுள்ளார். தான் பாதுகாப்பாக வெளியேற உதவிய ஆஃப்கன் பாதுகாவலர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள கனி, ‘அமைதிக்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததுதான் தலிபான் ஆக்கிரமிப்புக்கான காரணம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் ஒன்றும் 169 மில்லியன் டாலர் மக்கள் பணத்தை எடுத்துச் செல்லவில்லை என்றும் வேறு வழியின்றி ஆஃப்கனை விட்டு வெளியேறியபோது தன்னிட உடுத்திய உடையும் கால் செருப்பும் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தனக்கு பணமாற்றம் செய்யப்பட்டதாக வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அவர் கூறியுள்ளார். 

முன்னதாக,


ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் கையில் வீழ்ந்ததையடுத்து ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அருகில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டில் அவர் தஞ்சமடைந்திருக்கக்கூடும் என உலக நாடுகள் நினைத்துவந்த நிலையில் அவர் அபுதாபியில் இருப்பதாக UAE அரசு அறிவித்துள்ளது.


 


மனிதாபிமான அடிப்படையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் இன்று மாலை செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் சொத்துக்களை அஷ்ரப் கனி திருடிச்சென்றிருப்பதாகவும், அவரை ஒப்படைக்கவேண்டுமெனவும் தலிபான்கள் பிற நாட்டு தூதரகங்களிடம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ‛‛நான் நாட்டிற்குள்தான் இருக்கிறேன் என்னும் நிலையில் அடுத்த அதிபர் நான்தான். இதற்காக அனைத்து தலைவர்களையும் சந்தித்து ஆதரவுகோர உள்ளேன்’’ -துணை அதிபர் அமருல்லா சலேஹ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில் ”ஆஃப்கானின் அரசியல் சாசனத்தின்படி அதிபர் இல்லாத சமயத்திலோ அல்லது அவர் தப்பியோடிவிட்டாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ, இறந்தாலோ அந்தச் சூழலில் அதிபருக்கான பொறுப்பை துணை அதிபர்தான் ஏற்பார். நான் நாட்டிற்குள்தான் இருக்கிறேன் என்னும் நிலையில் அடுத்த அதிபர் நான்தான். இதற்காக அனைத்து தலைவர்களையும் சந்தித்து ஆதரவுகோர உள்ளேன்’ எனப் பதிவிட்டுள்ளார். மேலும் தலிபான் தீவிரவாதத்துக்கு தான் என்றுமே தலைவணங்கப்போவதில்லை எனவும் தன்னை நம்பியவரை என்றுமே காட்டிக்கொடுக்கப்போவதில்லை என்றும் தலிபான்களுடன் ஒரே கூரையின் கீழ் இருப்பது சாத்தியமே இல்லை” என்றும் அவர் கூறியிருந்தார்.


 


மேலும், ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியது முதல் தலிபான்கள் மீண்டும் தாக்குதல் நடத்தில் பல நகரங்களை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சியை எடுத்தனர். அதன் விளைவாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக கந்தஹார் நகரத்தை தலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து 15ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் தலிபான் கொண்டு வந்தது.  இந்நிலையில் தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷபிகுல்லா முஜாஹித் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''இஸ்லாமிய அடிப்படையில் பெண்களுக்கு உரிமைகளை வழங்க தலிபான் உறுதிபூண்டுள்ளது. பெண்களுக்குத் தேவையான சுகாதாரத் துறையிலும், பிற துறைகளிலும் பெண்கள் வேலை செய்யலாம். பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருக்காது. காபூலில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. அனைத்து தூதரகங்கள்,  சர்வதேச அமைப்புகள் மற்றும் உதவி நிறுவனங்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்கிறோம் என மற்ற நாடுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.