Kamala Harris Obama: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸால், டிரம்பை வீழ்த்த முடியாது என ஒபாமா கருதுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல்:
அமெரிக்க அதிபர் தேர்தலை உலக நாடுகளே உற்று நோக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத திடீர் திருப்பமாக, ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகினார். மேலும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவிக்க ஆதரவளித்தார். அந்த கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவளித்து வருகின்றனர். ஆனால் முன்னாள் அமெரிக்க அதிபரும், ஜனநாயக கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவருமான பராக் ஒபாமா, கமலா ஹாரிஸ் விவகாரத்தில் தனது நிலைப்பாடு பற்றி தற்போது வரை எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
கமலா ஹாரிஸுக்கு ஒபாமாவின் ஆதரவு இல்லையா?
கமலா ஹாரிஸுக்கு ஆதரவளிப்பதை ஒபாமா தவிர்க்கிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை, கமலா ஹாரிஸால் தோற்கடிக்க முடியாது என ஒபாமாவிற்கு சந்தேகம் உள்ளதாக கூறப்படுகிறது. அதிபர் பைடன் குடும்பத்தினரை மேற்கோள் காட்டி நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக களமிறக்க ஒபாமா உடன்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் போட்டியிட்டால் ஜனநாயகக் கட்சி தோல்வி அடையும் என ஒபாமா சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.
ஒபாமா முன்னிறுத்தும் வேட்பாளர் யார்?
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ள ஜனநாயக கட்சி மாநாட்டில், அரிசோனா செனட்டர் மார்க் கெல்லியை கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்த ஒபாமா விரும்புவதாக கூறப்படுகிறது. அந்நாட்டின் முன்னணி செய்தி நிறுவனங்களும் இதையே செய்தியாக வெளியிட்டுள்ளன. மறுபுறம், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை ஆதரிக்க பராக் ஒபாமா திட்டமிட்டுள்ளதாக என்பிசி கூறியுள்ளது. ஒபாமா தனிப்பட்ட முறையில் கமலா ஹாரிஸை ஆதரிப்பதாகவும், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. கமலா ஹாரிஸின் பெயரை ஒபாமாவும் பகிரங்கமாக ஆதரிப்பார். இருப்பினும், ஒபாமா இதை எப்போது செய்யப் போகிறார் என்பது பற்றிய தகவல் NBC அறிக்கையில் கொடுக்கப்படவில்லை. இதனிடையே, ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவின் பெயரும் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே கூறப்படுகிறது.
இந்தியர்கள் ஷாக்:
ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகியதுமே, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியின்றி தேர்வாவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக இந்தியர்களும், தஞ்சாவூரில் உள்ள கமலா ஹாரிஸின் தாயார் பிறந்த பகுதியைச் சேர்ந்த மக்களும் அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், தற்போது, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பதில் கடும் இழுபறி நிலவுகிறது. ஒபாமாவும் தனது ஆதரவு யாருக்கு என்பதை தெளிவுபடுத்தாததால், இந்தியார்கள் சற்றே அதிர்ச்சியில் உள்ளனர்.