இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசத்தில் ஏன் கலவரம் நடக்கிறது. அங்கு வாழும் இந்தியர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
வங்காளதேசம் உருவாக்கம்:
1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தது. அப்போது பாகிஸ்தான் நாடானது, கிழக்கு பாகிஸ்தான் என்றும் மேற்கு பாகிஸ்தான் என நிலப்பரப்பு ரீதியாக 2 பகுதிகளாக பாகிஸ்தான் பிரிந்து இருந்தது. அப்போது, கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்காள தேசம், கிழக்கு பாகிஸ்தானில் பிரிந்து வர நடத்திய போரில், இந்தியாவும் உதவியது. இந்நிலையில், 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான், சுதந்திர நாடாக வங்காள தேசமாக உருவானது.
அப்போதைய போரில், வங்காள தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களது பிள்ளைகளுக்கு, அரசு பணிகளில் 30 இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், சட்டம் கொண்டுவரப்பட்டது.
என்ன பிரச்னை:
தற்போது, அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யுமாறு, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டும் இல்லை என்றும், அங்கு 5 ல் ஒருவருக்கு வேலை இல்லாதது, பிரதமர் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக போரட்டங்கள் நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கின்றன. இப்போரட்டமானது, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களையும் தூண்டியுள்ளது.
இப்போராட்டம் தீவிரமானதால், அந்நாட்டு பாதுகாப்பு பிரிவானது அடக்கு முறையை கையாள ஆரம்பித்தனர். இதனால், சில இடங்களில் பாதுகாப்பு பிரிவினருக்கும் , மாணவர்களுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது.
பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன, இதுவரை, குறைந்தபட்சம் சுமார் 150 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆயிரக்கணகானோர் காயமடைந்திருக்கலாம் என்றும் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியர்களின் நிலை:
இந்தியர்கள் நிலை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதாவது, 8,500 மாணவர்கள் உட்பட 15,000 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருக்கிறார்.
மேலும் சுமார் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அண்டை மாநிலமான மேகாலயாவுக்கு வந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மாணவர்களின் போராட்டங்களால், வங்காள தேசமே அமைதியின்மையுடன் காணப்படுகிறது. மேலும் , ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரும் களமிறங்கியுள்ளதால் பதட்டமான சூழ்நிலையும் நிலவுகிறது.