வங்கதேசத்தில் சமீபத்தில் மர்ம நபர்களால் சுடப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததைத் தொடர்ந்து, அங்கு பயங்கர கலவரம் வெடித்தது. இதை பயன்படுத்தி, ஹிந்து இளைஞரை ஒரு கும்பல் கொடூரமான முறையில் அடித்துக் கொன்று, பின்னர் அவரது உடலை சாலையில் போட்டு தீவைத்து எரித்த சம்பவத்தால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும, கலவர கும்பல் பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைத்ததுடன், டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
வங்கதேசத்தில் சுடப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் மரணம்
வங்கதேசத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிராக கடந்தாண்டு ஜூலையில், மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் மூலம், முக்கிய மாணவர் தலைவராக உருவெடுத்தவர் தான், 34 வயதான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி. ஜூலை போராட்டத்துக்கு பின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு தப்பி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதைத் தொடர்ந்து, பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், அரசின் இடைக்கால தலைமை ஆலோசகராக பதவியேற்றார்.
அதைத் தொடர்ந்து, ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, 'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை இளைஞர்களிடையே பரப்பினார். ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை நிரந்தரமாக தடை செய்யவும் அவர் வலியுறுத்தினார். மேலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், ஷெரீப் ஓஸ்மான் டாக்காவில் ஒரு தொகுதியில் போட்டியிட இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி, டாக்காவில் உள்ள புரானா பால்டன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவரை, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்தவர், சுட்டுவிட்டு தப்பி ஓடினார். இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, டாக்கா மருத்துவ கல்லுாரியில் சேர்க்கப்பட்டு, பின்னர், மேல் சிகிச்சைக்காக, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தொர்ந்து சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஷெரீப் ஓஸ்மான் உயிரிழந்தார்.
மீண்டும் வெடித்த கலவரம்
இதையடுத்து, ஷெரீப் ஓஸ்மான் இறந்த செய்தி அறிந்து, வங்கதேசம் முழுதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் போராட்டம் கலவரமானது. தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் திரண்டு ஷெரீப் ஓஸ்மான் கொலையில் நீதி வேண்டும் என முழங்கினர். கொலையாளிகள் இந்தியா தப்பிச்சென்றதாக கூறப்படுவதால், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். நாடு முழுதும் அவாமி லீக் அலுவலகங்கள் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகின.
இந்து இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்டு எரிப்பு
இதனிடையே, வங்கதேசத்தின் மைமென்சிங் நகரில் நேற்று முன்தினம் இரவு ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞர், முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக பேசியதாகக் கூறி, ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து கொடூரமாகத் தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார். அப்போதும் விடாத அந்த காட்டுமிராண்டி கும்பல், சந்திர தாஸின் உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர்.
அதன் பின்னர், டாக்கா - மைமென்சிங் நெடுஞ்சாலைக்கு உடலை எடுத்துச் சென்று மீண்டும் தீ வைத்தனர். இதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.