Pakistan Beggars: பாகிஸ்தான் மக்களுக்கு விசா வழங்குவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முறைகேடுகளில் ஈடுபடும் பாகிஸ்தானியர்கள்:
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் திட்டமிட்டு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுவது மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானியர்கள் மீதான தங்களது கண்காணிப்பை அந்நாட்டு அரசாங்கங்கள் கடுமையாக்கியுள்ளன. அதேநேரம், இந்த நடவடிக்கை தங்களது நாட்டின் சர்வதேச அளவிலான நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
24 ஆயிரம் பிச்சைக்காரர்கள் நாடு கடத்தல்:
2025ம் ஆண்டில் மட்டும் பிச்சை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு சவுதி அரேபியா மட்டும் 24,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது. அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் பெரும்பாலான பாகிஸ்தானிய குடிமக்கள் மீது விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சிலர் நாட்டிற்கு வந்த பிறகு "குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்" என்ற கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (FIA) தரவுகள் இந்தப் பிரச்னையின் அளவைக் காட்டுகின்றன. 2025 ஆம் ஆண்டில், திட்டமிட்டு பிச்சை எடுப்பதை தொழிலாக செய்யும் கும்பல்களை அகற்றவும், சட்டவிரோத இடம்பெயர்வைத் தடுக்கவும் அதிகாரிகள் பாகிஸ்தான் விமான நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டு 66,154 பயணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
”பாகிஸ்தானிற்கு அவமானம்”
பிச்சை எடுக்கும் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களால் பாகிஸ்தானின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கப்படுவதாக FIA இயக்குநர் ஜெனரல் ரிஃபாத் முக்தார் வேதனை தெரிவித்துள்ளார். இந்த நடைமுறையானது வளைகுடா நாடுகளோடு மட்டும் நிற்கவில்லை. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கான பயணம், கம்போடியா மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களுக்கு சுற்றுலா விசாக்களை தவறாகப் பயன்படுத்துவது போன்ற குற்றங்களும் கண்டறியப்பட்டுள்ளதாம். முக்தாரின் கூற்றுப்படி, சவுதி அரேபியா இந்த ஆண்டு பிச்சை எடுத்ததாகக் கூறி 24,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியது. துபாய் சுமார் 6,000 நபர்களை திருப்பி அனுப்பியது. அதே நேரத்தில் அஜர்பைஜான் சுமார் 2,500 பாகிஸ்தானிய பிச்சைக்காரர்களை நாடு கடத்தியுள்ளது.
பாகிஸ்தானியர்கள் மீது தீவிர கண்காணிப்பு:
பாகிஸ்தானியர்களின் முறைகேடுகள் கடந்த ஆண்டே சவுதி அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்திருந்தது. 2024 ஆம் ஆண்டில், பிச்சைக்காரர்கள் உம்ரா விசாக்களை பயன்படுத்தி மெக்கா மற்றும் மதீனாவுக்குச் செல்வதைத் தடுக்குமாறு பாகிஸ்தானை ரியாத் முறையாக வலியுறுத்தியது. இந்த நடைமுறையைக் கட்டுப்படுத்தத் தவறினால் பாகிஸ்தான் உம்ரா மற்றும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று சவுதி அரேபியாவின் மத விவகார அமைச்சகம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது
தொழிலாக மாறிய பிச்சை
கடந்த ஆண்டு டான் பத்திரிகையில் எழுதிய வழக்கறிஞர் ரஃபியா ஜகாரியா, பிச்சை எடுப்பதை ஒரு விரக்தியான செயல் அல்ல, மாறாக மிகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு நிறுவனம் என்று விவரித்தார். மேலும், "பாகிஸ்தானில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகத் தோன்றும் ஒரு தொழில், அதன் ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு நிறைய வேலை இருப்பதை உறுதி செய்வதில் மிகவும் வெற்றிகரமாக உள்ளது, அது பிச்சை எடுக்கும் தொழில். இது மிகவும் வெற்றிகரமான முயற்சியாகும், இப்போது அது மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளது," என்று எழுதியிருந்தார்.
அரசாங்க அதிகாரிகளும் இதே போன்ற கவலைகளை எதிரொலித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில், மேற்கு ஆசிய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிச்சைக்காரர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என்றும், இந்த எண்ணிக்கை 90% என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு பாகிஸ்தானிய செயலாளர் ஜீஷான் கன்சாடா கூறினார்