கசகஸ்தானில் அஜர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளாகி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், ரஷிய நாட்டின் ஏவுகணை தற்செயலாக அந்த விமானத்தை தாக்கி இருக்கலாம் என செய்திகள் வெளியாகின. இந்த சூழலில், அந்த விமானம் ரஷியாவில் இருந்து சுடப்பட்டிருப்பதாக அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி, அஜர்பைஜான் நாட்டின் பாகுவில் இருந்து ரஷியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு 67 பயணிகள், விமானக் குழுவினர் 5 பேர் என மொத்தம் 72 பேருடன் விமானம் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. கசகஸ்தான் நாட்டில் உள்ள அக்தா விமான நிலையம் அருகே சென்றபோது அவசரமாக தரையிறங்க அனுமதி கோரப்பட்டது.
அஜர்பைஜான் விமான விபத்து:
ஆனால், ஒரு சில நிமிடங்களிலேயே அந்த விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில், 38 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 29 பேர் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், விமான விபத்து குறித்து அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதை பற்றிய உண்மையை மூடிமறைக்க ரஷியாவில் உள்ள சிலர் விபத்திற்கான காரணங்களைப் பற்றி பொய்யான கதைகளை பரப்பி வருகின்றனர்.
அதிபர் பரபர குற்றச்சாட்டு:
குற்றத்தை ஒப்புக்கொள்வது, நட்பு நாடாகக் கருதப்படும் அஜர்பைஜானிடம் உரிய நேரத்தில் மன்னிப்பு கேட்பது, இதைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவது -- இவை அனைத்தும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்" என்றார்.
இதற்காக ரஷிய அதிபர் புதின் ஏற்கனவே மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், ரஷிய ஏவுகணைதான் அஜர்பைஜான் விமானத்தை சுட்டதாக அவர் ஒப்புக்கொள்ளவில்லை. விபத்திற்கு முன்னர் பயணிகள் விமானம் க்ரோஸ்னியில் தரையிறங்க முயன்றபோது ரஷிய விமானப்படை அங்கு பயிற்சியில் ஈடுபட்டதாக புதின் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்த க்ரோஸ்னியை பொறுத்தவரையில், ட்ரோன்கள் மூலம் உக்ரைன் அடிக்கடி தாக்குதல் நடத்தும் பகுதியாக இருந்து வருகிறது. ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் மூன்றாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், உக்ரைனின் முக்கிய இலக்காக க்ரோஸ்னி இருக்கிறது.
இதையும் படிக்க: பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்