2024 ஆண்டு உலகளவில் அறிவியல் ரீதியாக நடந்த முக்கிய செய்திகள் மற்றும் சாதனைகள் குறித்தான செய்திகளை பார்ப்போம்.
சுனிதா வில்லியம்ஸ் :
இந்த வருடத்தில் விண்வெளி தொடர்பாக அதிகமாக பேசப்பட்ட செய்திகளில், விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ் என்ற செய்தியானது, டாப் இடத்தில் உள்ளது. ஜூன் மாதம், போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தின் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் , விண்கலத்தை சோதனை செய்வதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணமாக சென்றனர். ஸ்டார்லைனர் விண்கலத்தில் வெற்றிகரமாக சென்றாலும் , கோளாறு காரணமாக , அதில் திரும்பவில்லை. இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம், அவர்களை அழைத்துவர சென்றுவிட்டது.
பிப்ரவரி பூமி திரும்புவார்கள் என கூறப்பட்டாலும், தாமதமாகலாம் என்ற தகவலும் வருகின்றன. இந்திய வம்சாவளியான சுனிதா மிகவும் அனுபவம் உள்ளவர், ஏற்கனவே பல நாட்கள் விண்வெளியில் இருந்தவர் என்றாலும், வயது உள்ளிட்ட காரணங்களால், உடல்நலனில் சிக்கல் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாசாவின் டீப் ஸ்பேஸ் லேசர் கம்யூனிகேசன்
இந்த வருடம் ஜூன் மாதம் நாசா நாசாவின் டீப் ஸ்பேஸ் லேசர் கம்யூனிகேசன் ( Deep Space Laser Communication ) என்ற ஆய்வை செய்தது. இந்த ஆய்வானது, பூமியிலிருந்து சுமார் 39 கோடி கி.மீ தூரத்திற்கு தகவலை அனுப்பி பரிசோதனை செய்திருக்கிறது.
இந்த பரிசோதனையில், வழக்கமாக ரேடியோ சமிஞ்சை ( Radio Signals ) 2Mbps விட 10 மடங்கு வேகமாக லேசர் சமிஞ்சை 500 Mbps பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விண்வெளியில் தகவலை பரிமாற 1 மணி நேரம் இருக்கும் இடங்களில் வெறும் 2 நிமிடம்தான் ஆகும் என கூறப்படுகிறது. இது எதிர்காலத்தில், விண்வெளியில் வெகுதொலைவில் உள்ள விண்கலத்துடன் தொடர்பு கொள்வதற்கான கால அளவை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலவில் தரையிறங்கிய நாசாவின் ஒடிசியஸ் :
நாசா கடைசியாக 1972 ஆம் ஆண்டு, அப்போலோ 17 திட்டத்தின் மூலம், நிலவில் தரையிறங்கியது. அதன் பிறகு, பல்வேறு காரணங்களால் நிலவுக்குச் செல்லவில்லை. தற்போது , இந்த ஆண்டு நாசா, பல தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஒடிசியஸ் லேண்டர் விண்கலத்தை, நிலவின் தென்பகுதியில் தரையிறக்கியுள்ளது. இது நிலவின் பனிக்கட்டிகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது. இந்த திட்டமானது, 2028 ஆம் ஆண்டு நாசா மனிதனை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் பயணத்திற்கு முன்னோடி என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ்:
இந்த வருடம் விண்வெளியில் மிகவும் ஆச்சர்யமிக்கதாக பார்க்கப்பட்டது எலான் மஸ்க் நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் செய்த சாதனைதான். விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட்டின் பாகங்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான சோதனையை வெற்றிகரமாக செய்ததுதான். இதன் மூலம் விண்வெளி பயணத்தின் செலவானது குறையும் என தகவல் தெரிவிக்கின்றன.
China ( CNSA ) - chang e 6 Lunar Sample Return Mission”
இந்த வருடம் சீனாவின் chang e 6 Lunar Sample Return Mission திட்டத்தின்படி நிலவின் தென் பகுதியில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருக்கும் மண் மற்றும் பாறை துகளை எடுத்து பூமிக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் , மனிதர்கள் செல்லாமலையே, நிலவில் ஆய்வை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது சீனா. மேலும், அங்கு ஆய்வு கூடத்தை அமைக்கும் திட்டத்தையும் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
”விண்வெளி சுற்றுலா”
இந்த வருடத்தில், விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் திட்டம் வந்தது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் நிறுவனம், ப்ளூ ஆர்ஜின் மற்றும் விர்ஜின் கேபிடல் ஆகிய மூன்று நிறுவனங்கள், விண்வெளி வீரர்கள் அல்லாத, சாதாரண மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலாவாக கூட்டி சென்று அசத்தியது.
இந்தியா:
விண்வெளியில், இந்தியாவின் விண்வெளி நிலையத்தை அமைக்க, இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கு பாரதிய அந்தரிக்ஸ் ஸ்டேசன் என்னும் பெயர் வைத்துள்ளது. இதன் செயல் திட்டமானது 2028 தொடங்கும் என தகவல் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 5ஆம் தேதி, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் புரோபா-3 செயற்கைக்கோளை , இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோவின் வணிக ரீதியாக, வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இது, ஆராய்ச்சிக்காக இந்தியாவின் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவது மட்டுமன்றி, வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைகோள்களை அனுப்புவதன் மூலம் , நிதி ரீதியாகவும் வலிமை அடைவதற்கான முன்னெடுப்பாகவும் உள்ளதாக பார்க்கப்படுகிறது.