பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் என மேலூர் அருகே நடைபெற்ற பள்ளி மாணவர்கள் முகாமில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.

 

மதுரையில் விண்ணில் விஞ்ஞான தேடல் நிகழ்ச்சி


 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிபட்டியில்  உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 'விண்ணில் விஞ்ஞான தேடல்' எனும் தலைப்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விதுறை சார்பாக தகைசால் பள்ளிகள் 5 நாள் குளிர்கால உண்டு உறைவிட முகாமை தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்து கலந்துரையாடினர். மேடையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேசுகையில்...” எந்தவிதத்தில் சளைத்தவர் இல்லை என்பதை மாணவர்களாக நீங்கள்  நிரூபிக்கும் வகையில் இந்த முகாம் நடைபெற உள்ளது. அறிவு தேடலை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என பேசினார். 

 


 

அறிவு சார்ந்து இருக்க வேண்டும்


 

அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், “இந்த பயிற்சி முகாம் 6, 8,9,11 என 5 வகையான வகுப்பு மாணவர்களுக்கு  மதுரை, கோவை, தஞ்சை என 5 மாவட்டங்களில் இருந்து வந்த  நடைபெறுகின்றது. விண்ணில் என்ன நடக்கின்றது, என்பதை எடுத்து காட்டும் வகையில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்று உள்ளது. பிள்ளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல. பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம். சோறு உருட்டி சாப்பிட்டால் செரிக்காது என சொல்ல வேண்டும், கழுதைக்கு நடுவே சென்றால் உதைத்து விடும், கடல் ஆழம் உள்ள பகுதி எப்படி இருக்கும் என கூறும் சொல்லாடல்களை மாணவர்கள் தெரிந்து தெளிவு கொள்ள வேண்டும். அவ்வாறு தெளிவு கிடைக்க வேண்டும் என்றால் அறிவு சார்ந்து இருக்க வேண்டும்.  இதை கற்க  பயிற்சி முகாம் நடத்தப்படுகின்றது. 

 

சிந்திக்க தூண்டுவது கல்வி


 

உலகம் ரொம்ப சின்னது, நல்ல தோழமை பன்மை வளர்த்து கொள்ள வேண்டும், திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் அதற்கு மாணவர்களுக்கு இந்த முகாம் உதவுகின்றது. சிந்திக்க தூண்டுவது கல்வி, அதை செய்யக்கூடிய பயனுள்ள பயிற்சி முகாம் இது இருக்கும்.. அறிவை வளர்த்து கொள்ளுங்கள், குறிப்பாக பகுத்தறிவை வளர்த்து கொள்ளுங்கள்” என மாணவர்கள் மத்தியில் அன்பில் மகேஷ் உரையாற்றினார்.