பழுது பார்த்தபோது ஆட்டோமேடிக் கார் நசுக்கி மெக்கானிக் உயிரிழந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விழிப்புணர்வு வீடியோ என பலரும் அந்த சிசிடிவி காட்சியை ஷேர் செய்து வருகின்றனர்.


அந்த சிசிடிவி காட்சியின்படி நின்றுகொண்டிருக்கும் காரின் எஞ்சின் பகுதியை மெக்கானிக் ஒருவர் பழுதுபார்க்கிறார். பின்னர் ட்ரைவர்  இருக்கைக்குச் சென்று ஏதோ செய்துவிட்டு மீண்டும் காரின் முன்னால் நின்று பழுதுபார்க்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக கார் வேகமாக முன்னோக்கிச் செல்கிறது. திடீரென கார் நகர்ந்ததால் எதையும் செய்யமுடியாத மெக்கானிக் காரோடு அடித்துச் செல்லப்பட்டு எதிரே உள்ள கடையின் இரும்பு ஷட்டரில் மோதுகிறார். 


மெக்கானிக்கை அந்த கார் ஷட்டரோடு சேர்த்து நசுக்கி விடுகிறது. இதனை அருகில் இருந்து பார்க்கும் ஒரு பெண் அலறியடித்துக்கொண்டு ஓடி உள்ளே உள்ளவர்களை அழைத்து வருகிறார். இந்த சிசிடிவி காட்சி எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து பதிவிட்டுள்ள @ragiing_bull என்ற ட்விட்டர்வாசி, ஆட்டோமேட்டிக் வாகனம் பிரேக் டவுன் ஆனால் அதன்முன்னால் நிற்கக் கூடாது. உங்களது நண்பர்களையும் உறவினர்களையும் எச்சரிக்கை செய்யுங்கள். இதுதான் எடுத்துக்காட்டு என அந்த வீடியோவைபகிர்ந்துள்ளார்.






அந்த வீடியோ வைரலாக பரவினாலும் அந்தக்காட்சி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது உண்மையிலேயே ஆட்டோமேட்டிக் காரா, நியூட்ரலில் இருந்தால் மட்டுமே ஆட்டோமேட்டிக் கார் ஸ்டார்ட் ஆகும்.அப்படி இருக்கையில் இந்த விபத்து எப்படி என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.