இலங்கையில், கடந்த 2012-ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டதுதான் இந்த தாமரை கோபுரம். இது 2019-ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது .இருந்தபோதும் அது மக்கள் பார்வைக்காக விடப்படவில்லை. குறிப்பிட்ட சில ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சில பிரச்சனை காரணமாக அந்த கோபுரம் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இலங்கையில் உள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய கட்டிடமான தாமரை கோபுரம் நாளை, 15-ஆம் தேதி முதல் மக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது. சுமார் பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது இந்த தாமரை கோபுரம் உலக மக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது.
இதன்படி 15 ஆம் தேதி முதல் உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் நுழைவு சீட்டினை பெற்றுக்கொண்டு தாமரை கோபுரத்தினை சுற்றிப் பார்க்க இலங்கை அரசால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தாமரை கோபுர நிர்மாணத்திற்கு மில்லியன் கணக்கில் செலவிடப்பட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் தேதி சுமார் 30,600 மீட்டர் சதுர பரப்பளவில் குறித்த தாமரை கோபுரத்தின் கட்டுமான பணிகள் சீன அரசின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்டது.
தெற்காசியாவின் அதி உயரமான இந்த தாமரை கோபுரத்திற்கு நிதி உதவியாக சீன எக்சிம் வங்கி 68 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனுதவியாக வழங்கியது. மேலும் இந்த தாமரை கோபுரத்தின் ஏனைய செலவுகளை இலங்கை தொலைத்தொடர்பு ஆணையம் செய்திருக்கிறது.
ஆரம்பத்தில் தாமரை கோபுரத்திற்கான கட்டுமான செலவுகள் 104.3 மில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் 7 வருடங்களின் நிறைவில் அதன் கட்டுமாணப்பணிகள் நிறைவைடையும் போது 113 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 356 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட தெற்காசியாவின் மிக உயரமான இந்த தாமரை கோபுரம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. இருந்த போதிலும் பண பற்றாக்குறை, பராமரிப்பு பணிகள், அப்போதே அந்த கட்டுமானப் பணியில் ஏற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் என அது மக்கள் பார்வைக்காக விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தாமரை கோபுரம் திறக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் மக்கள் பார்வைக்காக 15-ஆம் தேதி விடப்படுகிறது.
பார்ப்பதற்கு மிகவும் அழகாக, தாமரை குளத்தில் ஒரு தாமரை எவ்வாறு நீண்டு வளர்ந்து பூத்திருக்கிறதோ அவ்வாறான அமைப்பில் ஒரு தனித்து விடப்பட்ட ஒரு தாமரைப் பூவாக இந்த கோபுரம் காட்சியளிக்கிறது. 356 மீட்டர் உயரமான இந்த கோபுரம், தெற்காசியாவிலேயே பெரிய கோபுரமாக கருதப்படுவதுடன், உலகிலேயே 19ஆவது உயரமான கோபுரமாகவும் இது இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. இந்த
தாமரை கோபுரத்தில் தாமரை மொட்டுக்கு கீழுள்ள பேஸ்மெண்ட் பகுதியானது 3 மாடிகளை கொண்டது என கூறப்படுகிறது.
இந்த தாமரை மொட்டு கோபுரத்தில் சுற்றுலா துறையினரை கவரும் வகையில் பல்வேறு நிர்மாணப் பணிகளும் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் சினிமா அரங்குகள், பிரபலமான வணிக வங்கிகள், வியாபார நிறுவனங்களுக்கான அலுவலகங்கள், என மேலும் பல வசதிகளுடன் இந்த கோபுரம் காட்சி அளிக்கிறது.
தற்போது இந்த தாமரை கோபுரத்தில், 70 சதவீத உள்நாட்டு முதலீட்டாளர்களும் , 30 சதவீத வெளிநாட்டு முதலீட்டாளர்களும் முதலீடு செய்வதற்கு முன்வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் இந்த தாமரை கோபுரத்தின் உச்சி பகுதியான பூ வடிவில் உள்ள மோட்டு பகுதியில் மட்டுமே 7 மாடிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஐந்தாவது மாடி தொழில்நுட்ப வசதியுடன், மக்களை கவரும் வகையில் சுழலும் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. தாமரை கோபுரத்தின் உச்சியில் இறுதியாக உள்ள 7-ஆவது மாடியானது பால்கனியாக சகல வசதிகளுடன், பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள பேர வாவியை அண்மித்துள்ள இந்த தாமரை கோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 200 வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகளும் இந்த இடத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கோபுரத்தின் ஊடாக இனிவரும் காலங்களில் இலங்கை தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒளி, ஒலிபரப்பு செய்யவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த கோபுரத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது மாடிகள் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. தாமரை கோபுரத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகள் வைபவங்களை நடத்துவதற்கான மண்டபங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கோபுரத்தின் 6-ஆவது மாடி மிகவும் சிறப்பு வாய்ந்த முறையில், தொழில்நுட்ப வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 6வது மாடியில் அமைக்கப்பட்டுள்ள உணவகமானது, சுழலும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் உணவு உட்கொண்ட வண்ணமே கொழும்பு நகர் முழுவதையும் சுற்றிய வாரே கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கிறது.
7-ஆவது மாடிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கோபுரமானது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை வழங்கும் கோபுரமாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 8 லிஃப்டுகளை கொண்ட இந்த கோபுரத்தில் நொடிக்கு 7 மீட்டர் உயரும் இலங்கையின் முதலாவது வேகமான மின்தூக்கி(லிஃப்ட்) பொருத்தப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாக பார்க்கப்படுகிறது. இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி விலைவாசி உயர்வு என்பன தாண்டவமாடும் நிலையில், சுற்றுலாத் துறையின் அபிவிருத்திக்காக கட்டப்பட்ட பல திட்டங்கள் மக்கள் பார்வைக்காக திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த தாமரை கோபுரம் மக்கள் பாவனைக்காகவும் வெளிநாட்டவரை கவரும் விதமாகவும் மீண்டும் திறக்கப்படுகிறது.
தாமரை கோபுரம், பச்சை மற்றும் ஊதா நிறத்தில், இலங்கையின் தலைநகர் கொழும்பு முழுவதையும் தெரியும் வகையில் நாம் இதன் உச்சி கோபுரத்திலிருந்து பார்வையிடலாம். இந்த தாமரை கோபுரத்தின் நுழைவு கட்டணமாக 2000 ரூபாய் என தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது. 2000 ரூபாவை கட்டணம் செலுத்துபவர்களுடன் வருகை தரும் 12 அல்லது 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு 500 ரூபா அறவிடப்படுகிறது.
அதேபோல் 500 ரூபா செலுத்துபவர்களுக்கு 200 ரூபாவும் அறவிடப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பாடசாலை மாணவர்களுக்கு 200 ரூபா நுழைவுகட்டணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாடசாலைகளில் இருந்து மாணவர்களை அழைத்து வருவதற்கு முன்னதாக பள்ளி நிர்வாகம் அனுமதி பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முன் அனுமதி பெற்றால் மட்டுமே பாடசாலை மாணவர்களுக்கு தனியாக நேரம் ஒதுக்கி சிறப்பு பார்வைக்காக அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க இந்த தாமரை கோபுரம் கடந்து வந்த பாதையை நாம் சற்று திரும்பிப் பார்ப்போம்....
இலங்கையை பொறுத்தவரை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில், 2009 ல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம் என்ற அறிவிப்பை வெளியிட்டு அதன் பின்னர் 2010 இலங்கையை நாங்கள் அபிவிருத்தி செய்கிறோம் என்ற பெயரில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் நாட்டில் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசு சீனாவின் உதவியுடன் இலங்கையில் பல்வேறு கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கின. அதில் ஒன்றுதான் இந்த தாமரை கோபுரம் , அதே போல் தாமரை தடாகம் என்ற பெயரில், பெரிய தாமரை போன்ற மிகப்பெரும் மண்டபம், அதேபோல் இலங்கையின் போர்ட் சிட்டி திட்டம். இந்தத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தான் இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி என்பது படிப்படியாக தொடங்கியது என்பதை யாரும் மறுக்க முடியாது. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த உடனேயே அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கையின் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட திட்டங்கள் தற்போது இலங்கைக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இலங்கையில் தொடங்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் சீன உதவியுடன் தான் தொடங்கப்பட்டன.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இலங்கையில் சீனா உதவியுடன் தொடங்கப்பட்ட இந்த தாமரை கோபுரம் ,தாமரை தடாகம், போர் சிட்டி திட்டம், துறைமுகத் திட்டங்கள் என்பன சீனாவுடன் ராஜபக்சவினரின் குடும்பம் அல்லது அரசு எந்தளவு நெருக்கமான தொடர்புகளை பேணி வந்திருக்கிறது என்பதை வெளிப்படையாக கோடிட்டு காட்டுகிறது.
இந்த சீன உதவியுடன் தொடங்கப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய தாமரை கோபுரமானது இலங்கையில் ராஜபக்சவினரின் அரசால் கொண்டுவரப்பட்ட வெள்ளை யானை திட்டம் என்ற திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டதாகும்.
இவ்வாறு திட்டமிடப்படாமல் வாங்கப்பட்ட கடன்கள், திட்டமிடாத பல கட்டுமான பணிகள் என இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியில் பெரும் பங்காற்றியது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2012 இல் கட்டிடத்தை கட்டத் தொடங்கியதில் இருந்து கோபுர நிர்மாணங்கள் ஊழல் கூற்றுகளால் பாதிக்கப்பட்டன. மகிந்த ராஜபக்ச உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிடம் பெருமளவு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
தற்போது இலங்கை அரசுக்கு தற்போது பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு, வருமானத்தை பெருக்குவதற்கு இந்த தாமரை கோபுரம் திறக்கப்படுகிறது.
இழப்புகளை ஈடு செய்வதற்கும், இதன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் ,இந்த தாமரை கோபுரம் திறக்கப்பட்டால் மட்டுமே வருவாயை பெற முடியும் என்ற நம்பிக்கையில் தற்போதைய இலங்கை அரசு இதனை மக்கள் பார்வைக்காக திறக்கிறது. இந்த தாமரை கோபுரத்தை ஒரு பொழுதுபோக்கு மையமாக மாற்றினால் மட்டுமே தற்போதய நிலையில் வருவாய் கிடைக்குமென அந்த கட்டிட நிர்வாகத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள 405 மீட்டர் மத்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி கோபுரத்தை ராஜபக்ச நகலெடுக்க விரும்பினார், ஆனால் அது படுதோல்வியடைந்தது என பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு சீனாவின் கடன் பொறி முறையும் முக்கிய காரணம் என்பதை அமெரிக்கா வெளிப்படையாக சுட்டிக்காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகவேதான் அண்மையில் சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் இலங்கையின் 51 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவை, ஆகவே ஏப்ரல் மாதத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என இலங்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த தாமரை கோபுரத்தை திறந்து வைத்த அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளிப்படையாக பேசி இருந்தார்.
கட்டிட நிர்மாணத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகையில் பண பற்றாக்குறை ஏற்பட்டதால் சீன வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட 16 பில்லியன் ரூபாய் கடனுதவி, 12 பில்லியன் ரூபாய் வரை மட்டுப்படுத்தப்பட்டதாகவும் முன்னாள் அதிபர் மைத்திரிபால குறிப்பிட்டிருந்தார். குறித்த கடன் தொகைக்காக இலங்கை அரசு ஒவ்வொரு ஆண்டும் 240 கோடி ரூபாய் பணத்தை சீனாவிற்கு செலுத்தி வருவதுடன், வரும் 10 வருடங்களுக்கு இவ்வாறே இந்த கடன் தொகையை செலுத்த வேண்டும் எனவும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன 2019 ஆம் ஆண்டு சுட்டிக்காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே மஹிந்த ராஜபக்சவினரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டமிடப்படாத கடன் உதவிகள் ஆண்டுக்கு ஆண்டு இலங்கை கடன் தொகையை வெளிநாடுகளுக்கு செலுத்தி செலுத்தியே பொருளாதார வீழ்ச்சியில் மூழ்கியது என்பது உண்மை.
அபிவிருத்தி திட்டங்கள் என சீனாவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட பல திட்டங்கள் இன்று நாட்டிற்கு சுமையாகியுள்ளதுடன் அவை பெரும் கடன் சுமையை உருவாக்கியுள்ளன என்பது நாடுகள் அறிந்த உண்மையாகும். மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை இன்று எதிர்க்கொண்டுள்ள நிலையில் வருமானத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட பல திட்டங்கள் பயனற்றதாகவே இருக்கின்றன.
ஆகவே இலங்கை சீனாவிடம் இருந்து அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் அப்போது வாங்கிய கடன்களை மீளடைப்பதற்கு ,இந்த தாமரை கோபுரம் ,தாமரை தடாகம் போர்ட் சிட்டி, துறைமுகத் திட்டங்கள் போதுமான வருவாயை இலங்கைக்கு ஈட்டி கொடுக்குமா என்பது கேள்விக்குறியே..