ஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் இருவர் சமீபத்தில் டென்னிஸ் விளையாட்டு வீரர் நோவாக் ஜோகோவிச் குறித்து ஆபாசமாக பேசிய தனிப்பட்ட உரையாடல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. செவன் நியூஸ் மெல்போர்ன் என்ற செய்தித் தொலைக்காட்சி தொகுப்பாளர்களான மைக் ஆமரும், ரெபக்கா மேட்டெர்ன் ஆகியோர் நேரலை முடிந்த பிறகு ஜோகோவிச் குறித்து ஆபாச வார்த்தைகளால் கடுமையாக வசை பொழிந்தனர். சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டுக்குள் நுழைவதற்கு முன் தவறான தகவல்களை ஜோகோவிச் அளித்த விவகாரத்தை ஒட்டி இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.


இணையத்தில் கசிய விடப்பட்ட இந்த வீடியோவில் இரண்டு தொகுப்பாளர்களும் தொலைக்காட்சி ஸ்டூடியோவில் அமர்ந்திருப்பது தெரிய வருகிறது. நேற்று மாலை 6 மணி செய்திகளை வழங்குவதற்கு முன்பு இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 



நோவாக் ஜோகோவிச்


 


இந்த வீடியோ வைரலானதால் இதுகுறித்து ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் மீது கோபம் கொண்டவர்கள் ஒரு தரப்பிலும், தனிப்பட்ட உரையாடல்களைப் பொது வெளியில் கசியவிடுவது குற்றம் என மற்றொரு தரப்பிலும் இதுகுறித்து பேசப்பட்டு வருகிறது. 


 






செவன் தொலைக்காட்சி இயக்குநர் க்ரெய்க் மெக்ஃபெர்சன் இந்த வீடியோ வெளியானததற்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 


கடந்த ஜனவரி 5 அன்று, செர்பிய நாட்டு டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவுக்கு 15 நாள்களுக்கு முந்தைய கொரோனா பரிசோதனை சான்றிதழைச் சமர்பித்தார். இது சர்ச்சையாகவே, அவருடைய சான்றிதழ் அங்கீகரிக்கப்படவில்லை எனக் கூறி, விசாவை ரத்து செய்து தனிமைப்படுத்தப்பட்டார். எனினும் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் விசா ரத்து செய்யப்பட்டது திரும்ப பெறப்பட்டது. 


 






இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள நோவாக் ஜோகோவிச் தன்னுடைய பயணங்கள் குறித்து தன்னுடைய குழுவே கவனித்துக் கொள்வதாகவும், அதில் ஏற்பட்ட சிறுபிழை இது எனவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் இருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு முன்பு, ஜோகோவிச் தன் தாய்நாடான செர்பியாவுக்குச் சென்றதாகவும், அதுகுறித்த விவரங்களை ஆஸ்திரேலிய தூதரகத்தில் அவர் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.