சமீப காலமாகவே, வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலியாவில் மூன்று இந்து கோயிகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களிலேயே மூன்று இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், விக்டோரியா மாகாணத்தில் மூன்றாவது இந்து கோயிலை காலிஸ்தானி ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கோயில்களை சேதப்படுத்தியது மட்டும் இன்றி இந்தியா நாட்டுக்கு எதிரான வாசகங்களை கோயிலின் சுவர்களில் அவர்கள் எழுதி சென்றதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மெல்போர்ன் ஆல்பர்ட் பார்க்கில் உள்ள இஸ்கான் கோயிலை சேதப்படுத்தி அதன் சுவர்களில் 'ஹிந்துஸ்தான் முர்தாபாத்' என அவர்கள் எழுதி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய தூதரகம், "சமீப வாரங்களில் மெல்போர்னில் உள்ள மூன்று இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களை இந்திய தூதரகம் கடுமையாக கண்டிக்கிறது. அமைதியான, பல நம்பிக்கைகளை கொண்ட, பல கலாச்சார இந்திய-ஆஸ்திரேலிய சமூகத்தினரிடையே வெறுப்பையும் பிரிவினையையும் விதைக்கும் தெளிவான முயற்சிகள் இது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் காலிஸ்தானி ஆதரவு சக்திகள் நடவடிக்கைகளை அதிகப்படுத்தியது இந்த சம்பவங்கள் மூலம் தெரிய வருகிறது என இந்திய தூதரகம் கவலை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அரசிடம் இது தொடர்பான கவலைகளை தொடர்ந்து எழுப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
"குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவது மட்டுமல்லாமல், மேலும் முயற்சிகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் தடைசெய்யப்பட்ட நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு காலிஸ்தான் தொடர்பாக பொதுவாக்கெடுப்பினை அறிவித்திருப்பது பற்றிய எங்கள் கவலைகள் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினர் மற்றும் அவர்களது சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் தேசிய நலனுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலியப் பகுதியைப் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்றும் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது" என இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 16ஆம் தேதி, விக்டோரியாவில் உள்ள கேரம் டவுன்ஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவ விஷ்ணு கோயிலும் இதேபோல் சேதப்படுத்தப்பட்டது.
அதேபோல, ஜனவரி 12ஆம் தேதி அன்று, மெல்போர்னில் உள்ள சுவாமிநாராயண் கோவிலும் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டு கோயில் சுவற்றில் இந்திய எதிர்ப்பு வாசகங்கள் வரையப்பட்டது.