கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கலவரத்திற்கும் அப்போதைய குஜராஜ் முதலமைச்சரான மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து அந்த ஆவணப்படம் பேசியிருந்தது.


இதையடுத்து, சர்ச்சையை ஏற்படுத்திய பிபிசி ஆவணப்படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் வெளியான பிபிசி ஆவணப்படத்திற்கான லிங் அதிரடியாக நீக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி கேரளாவிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்பினர் அந்த ஆவணப்படத்தை திரையிட்டனர்.


இந்நிலையில், ஆவணப்படத்திற்கு இந்தியா தடை விதித்திருப்பது பற்றி அமெரிக்க எதிர்வினை ஆற்றியுள்ளது. அதாவது, கருத்து சுதந்திரம் போன்ற ஜனநாயக பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க இது சரியான தருணம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க வெலியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், "உலகம் முழுவதும் உள்ள சுதந்திர ஊடகத்தின் முக்கியத்துவத்தை ஆதரிக்கிறோம். 


ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் மனித உரிமைகள் பங்களிப்பதால், கருத்துச் சுதந்திரம், மதம் அல்லது நம்பிக்கை அடிப்படையிலான சுதந்திரம் போன்ற ஜனநாயகக் கொள்கைகளின் முக்கியத்துவத்தை தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறோம்.


உலகெங்கிலும் உள்ள எங்கள் உறவுகளில் இது முக்கிய அங்கமாகும். இந்தியாவுடனான உறவிலும் இது முக்கிய அங்கமாகும். நீங்கள் குறிப்பிடும் ஆவணப்படம் எனக்குப் பரிச்சயமில்லை. இரண்டு செழிப்பான, துடிப்பான ஜனநாயக நாடுகளான அமெரிக்காவையும் இந்தியாவையும்  இயக்கும் பகிரப்பட்ட விழுமியங்களை நான் நன்கு அறிந்திருக்கிறேன்.


இந்தியாவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து எங்களுக்கு கவலைகள் எழும்போது, சரியான சந்தர்ப்பங்களில் குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் குரல் கொடுத்திருக்கிறோம்" என்றார்.


பிபிசி ஆவணப்படம் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிபிசி ஆவணப்படம் விவகாரம் குறித்து பாகிஸ்தான் வம்சாவளி எம்பி கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதில் அளித்த ரிஷி சுனக், ஆவணப்படத்தில் பிரதமர் மோடி காட்டப்பட்ட விதத்தை நான் ஒப்பு கொள்ளவில்லை என கூறினார். சமீப காலமாக, இந்திய - அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான உறவு வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்துள்ளது. 


 






குறிப்பாக, 90களில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு, இரு நாடுகளும் நெருங்கி வர தொடங்கின. இதற்கு மத்தியில், பிபிசி ஆவணப்பட விவகாரத்தில் அமெரிக்க கருத்து தெரிவித்துள்ளது.