மற்ற உணவக செயின்கள் போல அல்லாமல் பிரபல அமெரிக்க உணவக நிறுவனமான மெக்டொனால்ட் அதனை குறைந்த விலையில் நல்ல பர்கர்களுக்கு பெயர் போனது. ஆனால் ஷாக்கிங்கான விஷயமாக கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு அப்படி இல்லை. உண்மையில் 5-நட்சத்திர உணவகத்தில் உணவருந்திவிட்டு பில் செலுத்துவதை விட அவர் பல மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி வந்தது.  ஒருவேளை ஸ்பெஷல் பர்கராக இருக்கக் கூடும் என்று நினைத்தீர்களா? நாங்களும் அப்படித்தான் முதலில் நினைத்தோம். ஆனால் சங்கதி அதுவும் இல்லையாம்... மேலும் அவர் செய்த ஒரே தவறு, அதிகப்படியான உணவுகளை ஆர்டர் செய்ததும் அதை சாப்பிட்டு முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதும்தான். அதிக நேரம் சாப்பிடுவது தவறா என நீங்கள் குழம்புகிறீர்களா? எங்களுக்கும் அதே குழப்பம்தான். அப்படி என்னதான் நடந்தது...பார்ப்போம்!


கேம்பிரிட்ஜ் நியூமார்க்கெட் சாலையில் உள்ள மெக்டொனால்டுக்கு ஷாபூர் மெஃப்தா என்ற நபர் சென்று தனது காரை துரித உணவு வாடிக்கையாளர்களுக்கான ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடத்தில் நிறுத்தியுள்ளார். வேலை முடிந்து அங்கேயே தன் சகோதரனைச் சந்தித்து நன்றாகச் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார். ஆனால் இந்த நிம்மதியெல்லாம் UK பார்க்கிங் கன்ட்ரோல் என்கின்ற தனியார் பார்க்கிங் நிறுவனத்திடம் இருந்து அபராத பில்லை பெறும் வரை மட்டுமே. மெக்டொனால்ட்டில் அதிகநேரம் கார் நிறுத்தியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. 


”ஒரு புறாவுக்குப் போரா?”


இதுகுறித்து ஷபூர் மெஃப்தா கூறுகையில் ,"இந்த பில்லை பார்த்தால் நான் நரகத்தில் பார்க்கிங் செய்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதுவரையில் நான் எதிர்கொண்ட காஸ்ட்லியான பார்க்கிங் இதுதான்"  என்கிறார். நியூமார்க்கெட் சாலையில் உள்ள மெக்டொனால்டுக்கு இரண்டு நாட்களுக்குச் சென்றதற்கு இந்திய மதிப்பில் சுமார் பத்தாயிரம் ரூபாய் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஜனவரி 4 மற்றும் ஜனவரி 6, 2023 ஆகிய தேதிகளில் அங்கு சென்றுள்ளார். பார்க்கிங் இடத்தில் மெக்டொனால்டு வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 90 நிமிட நேரத்தைத் தாண்டியதால் பார்க்கிங் நிறுவனம் அவருக்கு அபராதம் விதித்தது. காரை நிறுத்தியது குத்தமா? ஒரு புறாவுக்கு இத்தனை அக்கப்போரா எனக் கொதித்து எழுகிறார் ஷபூர் மெஃப்தா. 


இதுகுறித்து கூறும் மெஃப்தா, "மெக்டொனால்டுக்குள் நீங்கள் உட்கார்ந்து, சாப்பிட்டு, செல்ல 90 நிமிடங்கள் மட்டுமே நேரம் ஒதுக்கப்படும் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை. நாங்கள் கொஞ்சம் அதிகமாகவே உணவை ஆர்டர் செய்தோம், அதை எப்படி அவசரமாகச் சாப்பிட முடியும்? மேலும் உணவகங்கள் ஆசுவாசமாக அமர்ந்து சாப்பிடுவதற்குதானே" என்று கோபமடைந்தார். இங்கிலாந்துக்குச் சுற்றுலா செல்பவர்கள் என்றால் இதையெல்லாம் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் நண்பர்களே...