உலகம் முழுவதிலுமே, இந்தியர்கள் இல்லாத நாடே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு, படிப்பு, வேலை என பல்வேறு நாடுகளுக்கும் சென்று இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். பல நாடுகளில் இந்தியர்களுக்கு எதிர்ப்பும் இருந்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில், இந்தியர்கள் இடம்பெயர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது. இதற்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இந்தியர்களுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இந்தியர்களுக்கு எதிராக “மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா“ பேரணி
ஆஸ்திரேலியாவில், இந்தியர்கள் இடம்பெயர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் பல நகரங்களிலும் “மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா“ அதாவது “ஆஸ்திரேலியாவுக்காக பேரணி“ என்ற தலைப்பில் இந்தியர்களுக்கு எதிரான பேரணியும், போராட்டங்களும், பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், கேன்பெர்ரா, அடிலெய்ட், பெர்த், ஹோபர்ட் உள்ளிட்ட இடங்களில், நடைபெற்ற பேரணி போராட்டங்களில், இந்தியர்களின் குடியேற்றத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தி வந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு எதிராக துண்டு பிரசுரங்களையும் விநியோகித்துள்ளனர்.
அதில், ‘100 ஆண்டுகளில் வந்த கிரேக்கர்கள் மற்றும் இத்தாலியர்களை விட, 5 ஆண்டுகளில் அதிகமான இந்தியர்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், இது நமக்கு தெரிந்த ஒரு நாட்டிலிருந்து மட்டுமே வந்துள்ளனர் என்றும், குடியேற்றம் ஒரு கலாசார தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளனர்.
இது ஒரு சிறிய கலாசார மாற்றம் அல்ல என்றும் பன்னாட்டு நிதியால் சுரண்டப்படுவதற்கான ஒரு பொருளாதார மண்டலம் ஆஸ்திரேலியா அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அரசு கண்டனம்
இந்தியர்களுக்கு எதிரான இந்த போராட்டத்திற்கு, அந்நாட்டு பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அரசு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இந்த போராட்டம் வெறுப்பை பரப்புவதுபோல் உள்ளதாகவும், 2-ம் உலகப் போருக்கு பிறகு உருவான ஒரு தீவிர வலதுசாரி அரசியல் மற்றும் சமூக இயக்கத்திற்கு இந்த போராட்டத்தில் தொடர்பு உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
இனவெறி மற்றும் தங்கள் நாட்டு கலாசாரம் மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தில் வெடித்துள்ள இந்த போராட்டங்களுக்கு இங்கு இடமில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் மக்களுக்கு இடமில்லை என்று குறிப்பிட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, பல்வேறு கலாசாரம் ஆஸ்திரேலியாவின் தேசிய அடையாளத்தின் ஒருங்கிணைந்த மற்றும் முக்கியமான பகுதியாகும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே, பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு போலீசார் காயமடைந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது என்னடா இந்தியர்களுக்கு வந்த சோதனை என்பது போல், அமைதியான பகுதியாகவும், இந்தியர்களுக்கு மிகவும் இணக்கமான இடமாகவும் கருதப்படும் ஆஸ்திரேலியாவில் இத்தகைய போராட்டம் வெடித்துள்ளது, இந்தியர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.