ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய சர்வதேச கல்வி மாநாட்டில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று உரையாற்றினார். பின்னர், ஆஸ்திரேலிய கல்வித்துறை அமைச்சர் ஜேசன் கிளேர் உடன் தர்மேந்திர பிரதான் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
"மாணவர்களை தயார்படுத்த வேண்டும்"
இந்த நிகழ்ச்சியில் இந்திய பிரதிநிதிகள், இரு நாட்டு பல்கலைக்கழகங்களின் பிரதிநதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான வலுவான, வளர்ந்து வரும் ஒத்துழைப்பை தர்மேந்திர பிரதான் தமது உரையில் பாராட்டினார்.
இது இரு நாடுகளின் வரலாற்றை இணைத்து, பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோரின் தொலைநோக்கு தலைமையின் கீழ் இந்த உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் கல்வி முறையை பாட்டிய ஆஸ்திரேலிய அமைச்சர்:
4-வது தொழிற்புரட்சியில், தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களாக, மாணவர்களை கல்வி தயார்படுத்த வேண்டும் என்று தர்மேந்திர பிரதான் எடுத்துரைத்தார். இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை, வளர்ந்து வரும் வேலைவாய்ப்புச் சந்தைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் கல்வியறிவு, மென் திறன்கள், விமர்சன சிந்தனை, பலதுறை ஆய்வுகள் ஆகியவற்றை வலியுறுத்தும் கட்டமைப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார்.
கல்வியில் ஒத்துழைப்பு என்பது இந்திய - ஆஸ்திரேலிய உறவின் அடிப்படை என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார். பின்னர் பேசிய ஆஸ்திரேலிய கல்வித்துறை அமைச்சர், நல்ல கல்வி முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
நல்ல கல்வியால் நாடுகளை சிறந்த முறையில் மாற்றியமைக்க முடியும் என்று அவர் கூறினார். இந்தியாவின் கல்வி முறைகளைப் பாராட்டிய அவர், 2035 ஆம் ஆண்டுக்குள் உலகெங்கிலும் பல்கலைக்கழக பட்டம் பெறும் நான்கில் ஒருவர் இந்தியாவில் இருப்பார் என்று குறிப்பிட்டார்.
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்திய, ஆஸ்திரேலிய நாடுகள் நெருக்கமான உறவை பேணி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் தூதரக ரீதியான உறவிலிருந்து விரிவான தூதரக கூட்டணியாக உறவை மேம்படுத்தி கொண்டது.