Australia Student Visa Fee: புலம்பெயர்வால் வீட்டுச் சந்தையில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் நோக்கில், ஆஸ்திரேலிய அரசு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
விசா கட்டணம் இருமடங்கு உயர்வு:
சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலிய அரசு இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது. அதன்படி, சுமார் 40 ஆயிரம் ரூபாய் ஆக இருந்த வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம், தற்போது 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதிகப்படியான புலம்பெயர்வு மற்றும் வீட்டுச் சந்தையில் ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, பார்வையாளர் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் தற்காலிக பட்டதாரி விசாவைக் கொண்ட மாணவர்கள் தற்போது மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் தேர்வில், ஆஸ்திரேலியாவும் முதன்மையான தேர்வாக உள்ளது. இந்நிலையில் விசா கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது, இந்திய மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்த நெருக்கடி:
முன்னதாக மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச சேமிப்பு தொகையையும் ஆஸ்திரேலிய அரசு அதிகரித்தது. அதன்படி, 13.57 லட்சமாக இருந்த குறைந்தபட்ச சேமிப்புத் தொகை ஆனது, 16.45 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதோடு, ஆங்கில மொழி அறிவுக்கான கட்டுப்பாடுகளும் தீவிரமாகப்பட்டன. இந்நிலையில் தான் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகங்களின் CEO Luke Sheehy, ”இந்தத் துறையில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான கொள்கை அழுத்தம் கவலை அளிகிறது. சர்வதேசக் கல்வியானது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதித் தொழில்களில் ஒன்றாகும். 2022-2023 நிதியாண்டில் பொருளாதாரத்திற்கு 36.4 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருந்தது. இந்நிலையில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் புலம்பெயர்வு:
மார்ச் மாதம் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவ்ல் நிகர குடியேற்றம் 60% அதிகரித்து 2023 செப்டம்பர் 30 வரையிலான தேதியில் 5 லட்சத்து 48 ஆயிரத்து 800 பேராக உயர்ந்துள்ளது என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அதிகரித்த விசா கட்டணங்கள், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற மற்ற முக்கிய இடங்களை விட ஆஸ்திரேலியாவிற்கு மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை அதிகப்படியாக மாற்றியுள்ளது. குறிப்பிட்ட நாடுகளில் மாணவர்களுக்கான விசாக்களுக்கு முறையே $185 டாலர்கள் மற்றும் $110 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிக்கம் செலுத்தும் இந்திய மாணவர்கள்:
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கையில் இரண்டாவது பெரிய நாடாக இருந்தாலும், இந்திய மாணவர்களின் விசா கோரிக்கைகள் டிசம்பர் 2022 மற்றும் டிசம்பர் 2023 க்கு இடைப்பட்ட காலத்தில், 48% அளவிற்கு நிராகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கூட, ஜனவரி-செப்டம்பர் 2023 காலகட்டத்தில் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் சுமார் 1.22 லட்சம் இந்திய மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக உள்ளது.