தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறி அமைப்பை முடிவுக்குக் கொண்டுவரப் போராடியவரும், பிறகு அந்நாட்டின் அதிபராக இருந்தவருமான நெல்சன் மண்டேலா நீண்ட காலம் அடைக்கப்பட்டிருந்த ராபன் தீவுச் சிறைக் கூடத்தின் (செல்) சாவியை ஏலம் விட முயற்சி நடந்தது. இதை தடுத்து நிறுத்தக் கோரி பல போராட்டங்களை நடத்தியது தென்னாப்பிரிக்கா. தென்னாப்பிரிக்கா மட்டுமின்றி, உலகம் முழுக்க ஒரு நாயகராகக் கொண்டாப்படும் மண்டேலா தன் 27 ஆண்டு கால சிறைவாசத்தில் 18 ஆண்டுகளை ராபன் தீவுகளில் கழித்தார். அவர் இருந்த சிறையில் காவலராகப் பணியாற்றிய பிராண்ட் பிற்காலத்தில் அவரது நெருங்கிய நண்பரானார். 1990ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார் நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்கா மெல்ல நிறவெறி அமைப்பில் இருந்து வெளியேறத் தொடங்கியது. 1994ஆம் ஆண்டு பல இனத்தவர்களும் தேர்தலில் போட்டியிட்டனர். அத்தேர்தலில் நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த முதல் அதிபரானார். இதில் 18 ஆண்டுகள் அவர் ரோபன் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

  



தற்போது அந்த சிறைச்சாலையின் சாவி ஜனவரி 28ம் தேதி ஏலம் விடப்படும் என்று அமெரிக்க ஏல நிறுவனம்  அறிவித்திருந்தது. 


இந்நிலையில் இந்த ஏலத்தை நிறுத்துமாறு தென் ஆப்பிரிக்க அரசு சார்பில் அமெரிக்க ஏல நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டது.  தங்கள் நாட்டு தலைவர் நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறைச் சாலையின் சாவி அனுமதிக்கப்படாமல்  தென்னாப்பிரிக்காவை விட்டுச் சென்றது எப்படி என  கேள்வி எழுந்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை ஏலம் நிறுத்தப்படுவதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.


நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறையின் சாவியை மட்டும் ஏலத்தில் விடப் போவதில்லை. அதோடு அவரே கைப்பட வரைந்த 'தி லைட் ஹவுஸ்' என்கிற ஓவியம், சிறையில் உடல் நலனுக்காக அவர் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட உடற்பயிற்சி சைக்கிள், டென்னில் ராக்கெட் போன்றவையும் ஏலத்தில் விடப்பட உள்ளன.


இந்த நடவடிக்கைக்கு தென்ஆப்பிரிக்காவின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் நத்தி மத்தேத்வா பாராட்டு தெரிவித்துள்ளார்.



சிறைச்சாலை சாவி, தென்னாப்பிரிக்காவின் வலிமிகுந்த வரலாற்றைக் குறிக்கிறது. அந்த சாவி தென் ஆப்பிரிக்கர்களின் சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டம் குறித்த தற்போதைய  ஆதாரம். அது தென்ஆப்பிரிக்கா மக்களுக்கு சொந்தமானது. எனவே இது உரிமையுடன் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மண்டேலா ஒரே ஒரு முறைதான் பதவி வகித்தார். 1999ல் அவர் தானாக முன்வந்து பதவியிலிருந்து விலகிய வெகு சில ஆப்ரிக்கத் தலைவர்களில் ஒருவரானார் அவர். தென் ஆப்ரிக்காவின் அடுத்த அதிபர் மற்றும் ஏ.என்.சி கட்சியின் தலைவர் என்ற இரு பதவிகளுக்கும் மண்டேலாவுக்கு அடுத்தபடியாக வந்தார் தாபோ இம்பெக்கி. 2013ஆம் ஆண்டு தன் 95ஆவது வயதில் காலமானார் மண்டேலா.


காந்தியின் அகிம்சை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவ்வழியிலேயே தன் போராட்டங்களை முன்னெடுத்த நெல்சன் மண்டேலா 1993ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு, 1990ஆம் ஆண்டில் இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத் ரத்னா, பாகிஸ்தான் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான நிஷான் இ பாகிஸ்தான் என பல பன்னாட்டு விருதுகளைப் பெற்றார்.