ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற ஒப்பற்ற விஞ்ஞானிகளுக்கு நிகராக புகழப் பெ‌ற்ற ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை ஆரம்பம் முதலே முள் படுக்கையாகவே இருந்தது. நரம்பியல் நோயால் உடல் அளவில் முடங்கினாலும், உள்ளத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருந்து ஒட்டுமொத்த விஞ்ஞான உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். “கை கால்கள் செயல்படாது. சக்கர நாற்காலியிலேயே வாழ வேண்டும். விரைவில் மரணம் ஏற்படும்” ஸ்டீபன் ஹாக்கிங்கின் 21 ஆவது வயதில் மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்த வார்த்தைகள் இவை. 1942-ஆம் ஆண்டு பிரிட்டனில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கை, கால்களின் செயல்பாட்டை இழந்தாலும் மூளையின் செயல்பாட்டைக் கொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டே பல சாதனைகளை புரிந்துள்ளார்.



இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி 8, 1942ம் ஆண்டு பிறந்தவர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். இவருடைய தந்தையும் ஒரு இயற்பியலாளர், வெப்ப மண்டல நோய்கள் குறித்த ஆய்வை இவர் செய்தார். ஸ்டீபனின் தாயார் லிபரெல் கட்சியில் இருந்தார். இவருடைய 80வது பிறந்தநாள் ஆன இன்று கூகுள் ஒரு டூடூல் ஆர்ட்டை முகப்பில் வைத்து மரியாதை செய்துள்ளது. அத்துடன் ஒரு யூட்யூப் வீடியோவும் வெளியிட்டுள்ளது. 1962ம் ஆண்டில் பட்டதாரியான ஸ்டீபன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கு சேர்வதற்காக இறுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இயற்பியல் என்பது எப்போதுமே ஒரு போரான பாடமாகத்தான் பள்ளி காலங்களில் இருந்தது. ஆனால் வேதியியல் மிகவும் பிடித்தமானதாக இருக்கும், ஏனெனில் அதில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும் என்று ஹாக்கிங் ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். ஆனால் இயற்பியலும், வானியலும் நாம் எங்கிருந்து வந்தோம், நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்பதற்கான புரிதல்களை ஏற்படுத்தும். அண்டம் பற்றி ஆழமாக தெரிந்து கொள்வதே என்னுடைய விருப்பம் என்றும் ஸ்டீபன் கூறி இருக்கிறார். 



இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருந்துளைகளுக்கும் (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கியவை. கருந்துளையினுள் ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றனவென்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இந்த வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர். “எனக்கு ஏற்பட்டிருக்கும் உடல்குறை பற்றி வருந்திகொண்டே இருப்பது வீண் வேலை. வாழ்க்கையில் எடுத்த காரியங்களில் வெற்றி காண வேண்டும். உங்கள் நிலைமைக்காக எப்போதும் புலம்பிகொண்டும், கோபப்பட்டு கொண்டும் இருந்தீர்கள் என்றால், அதையெல்லாம் கேட்பதற்கு யாருக்கும் நேரமில்லை” என்று அவர் ஒருமுறை எழுதியிருந்தார். எப்போதும் சோர்வடையும் எல்லோர்க்கும் எழுந்து ஓட ஒரு உற்சாகத்தை தன் வாழ்வினகத்தே, தன் சக்கர நாற்காலியின் அகத்தே, தன் முகத்தின் அகத்தே வைத்திருப்பவரை முகப்பில் வைத்திருக்கிறது கூகுள்.