வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள 9 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்து:
நள்ளிரவில் ஏற்பட்ட தீ உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 70 பேர் வரை மீட்கப்பட்ட நிலையில், 54 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த கட்டடத்தில் 150 பேர் வசித்து வந்ததாக கூறப்படும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கர தீ விபத்து:
ஹனோய் நகரில் ஏற்பட்டது ஒரு பயங்கர தீ விபத்து என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகலான பகுதியில் அந்த கட்டடம் அமைந்துள்ளதால் மீட்பு பணிகளை துரிதமாக செய்யமுடியவில்லை என கூறப்படுகிறது. அதோடு, உள்ளே இருந்தவர்கள் தீ விபத்து போன்ற அவசர காலங்களில் தப்பிப்பதற்கும் அந்த கட்டடத்தில் எந்த வசதிகளும் இல்லை என கூறபப்டுகிறது. குறுகலான பாதை காரணமாக விபத்து நேர்ந்த இடத்தில் இருந்து 300 முதல் 400 மீட்டர் தூரத்திலேயே தியணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. இதனால், உடனடியாக விரைந்து தீயை அணைக்க முடியாமல் தவித்தனர்.
தொடரும் விபத்துகள்:
வியட்நாமில் சமீபத்திய ஆண்டுகளில் பல கொடிய தீ விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக பிரபலமான கரோக்கி பார்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களில் இந்த விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. ஓராண்டுக்கு முன், ஹோ சி மின் நகரின் வர்த்தக மையத்தில் உள்ள மூன்று அடுக்கு கரோக்கி பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். அந்த தீ விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். தீ விபத்து தொடர்பாக பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அதன் விளைவாக, அதிக ஆபத்துள்ள அனைத்து இடங்களையும் ஆய்வு செய்ய பிரதமர் உத்தரவிட்டார். 2018 ஆம் ஆண்டு ஹோ சின் மின் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீப்பிடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். முன்னதாக 2016 ஆம் ஆண்டு ஹனோய் கரோக்கி மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தான் தலைநகர் ஹனோயில் மீண்டும் ஒரு மோசமான தீ விபத்து ஏற்பட்டு, 50 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.