விண்வெளி வீராங்கனை ஒருவர் விண்வெளி நிலையத்தில் இருந்தபடி பாரமில்லாமல் பளு தூக்கும் உடற்பயிற்சி வீடியோ ஒன்றைப் பகிர்ந்து இணையவாசிகளிடையே ஹிட் அடித்துள்ளார்.
இத்தாலிய ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) விண்வெளி வீராங்கனையான சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி நேற்று (ஆக.17) ட்விட்டரில் தன் விண்வெளிப் பயணத்தின்ம் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
பாரத்தை உணராமல் கிறிஸ்டோஃபோரெட்டி எளிமையாக பளு தூக்குதல் பயிற்சியை விண்வெளி நிலையத்தில் இருந்தபடி மேற்கொள்ளும் இந்த வீடியோ காட்சிகள் நெட்டிசன்களை வியக்கவைத்துள்ளது.
"எடையை உணராமல் பளு தூக்குதல். விண்வெளியாகட்டும், பூமியாகட்டும் இந்த சுமை தாங்கும் பயிற்சிகள் எலும்பு அடர்த்தி பெற்று வலுவடையவும், வலுவான தசைகளைப் பராமரிக்கவும் உதவுகிறது. பளு தூக்கி வலிமையான எலும்புகளை பெறுங்கள்" என கிறிஸ்டோஃபோரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வீடியோவில், ஒவ்வொரு நாளும் நாங்கள் ஸ்குவாட், மற்றும் சில பளு தூக்கும் பயிற்சிகளை மேற்கொள்கிறோம். எலும்பு அடர்த்தியை பராமரிக்க தினமும் சில மணி நேரங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக பெண்கள் தங்கள் மெனோபாஸ் காலத்தை அடையும்போது அவர்களது எலும்புகள் வலுவிழக்கின்றன.
நீங்கள் மெனோபாஸ் வயதை எட்டாதவராக இருந்தாலும் இந்த பளு தூக்குதல் பயிற்சிகளை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டியின் இந்தப் பதிவு ரீட்வீட்களையும் லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது.
முன்னதாக இவர் விண்வெளி நிலையத்தில் செடிகள் வளர்ப்பது குறித்து இதேபோல் லைக்ஸ் அள்ளியது குறிப்பிடத்தக்கது.