பிரபல விண்வெளி புகைப்படக்காரர் ஆண்டிரோ மெக்கார்த்தி அசத்தலான வீடியோ ஒன்றை எடுத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விண்வெளியில் இயங்கிக் கொண்டு இருக்கும் சர்வதேச விண்வெளி மையம் நிலவின் முன்பு மிக வேகமாக கடந்து செல்வதை தன்னுடைய கேமராவில் பதிவு செய்துள்ளார் ஆண்டிரோ. அவருடைய கேமரா கண்ணில் நிலவும், விண்வெளி மையமும் மங்கலாக தெரிகிறது. ஆனாலும் சூரியக் கதிர்களின் வெளிச்சத்திலும் இவை இரண்டும் கண்ணுக்கு தெரிகின்றன.



இந்த அரிய வீடியோவை @cosmic_background என்ற இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆண்டிரோ, இன்று காலை என் கேமராவில் சிக்கியது. இது மிகவும் அரிதான காட்சிதான். சூரியன் வெளிச்சத்தில் நிலவு தெளிவாக தெரியாது. ஆனபோதிலும் இந்த காட்சி கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் மிகப்பெரிய நிலவின் முன்பு மிகச்சிறிய விண்வெளி மையம் மிக வேகமாக கடந்து செல்கிறது. இது சாதாரணமாக கண்ணுக்கு சிக்காது. நாம் நினைப்பது போல விண்வெளி மையம் சாதாரண வேகத்தில் பயணம் செய்யாது. அதன் வேகம், விநாடிக்கு 7.66 கிமீ. அதாவது ஒரு மணி நேரத்திற்கு 27 ஆயிரத்து 600கிமீ வேகத்தை கடந்து செல்லும். இந்த வேகத்தை தன்னுடைய கேமராவில் சிக்கவைத்து வீடியோவின் வேகத்தை 6 மடங்குக்கும் அதிகமாக குறைத்து நம் கண்களுக்கு விருந்தாக படைத்துள்ளார் ஆன்டிரோ. 


விண்வெளி மீது ஆர்வம் கொண்டவர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அந்த வீடியோவைப் பகிர்ந்து ஆர்வமாக பதிவிட்டு வருகின்றனர்.