அமெரிக்காவுக்கு மூன்று நாள்கள் அரசுமுறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, நேற்று வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் பைடனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதை தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது, ஜனநாயகம், சிறுபான்மையினரின் உரிமைகள், கருத்து சுதந்திரம் பற்றி பிரதமர் மோடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


"ஜனநாயகத்தை சுவாசிக்கிறோம்"


மத சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்த இந்தியா என்ன செய்யும் என்று கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "நீங்கள் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் ஜனநாயக நாடு. ஜனநாயகம் என்பது எங்களது ஆன்மா, ரத்தத்தின் ஒரு பகுதி. நாங்கள் ஜனநாயகத்தில் வாழ்கிறோம். சுவாசிக்கிறோம். அதுதான், எங்கள் அரசியலமைப்பில் உள்ளது" என்றார்.


தொடர்ந்து பேசிய மோடி, "மனித விழுமியங்களும் மனித உரிமைகளும் இல்லாவிட்டால் ஜனநாயகம் இல்லை. ஜனநாயகமாக வாழும்போது பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. எனது அரசாங்கத்தால் அனைத்தையும் வழங்க முடியும். அப்படி, வழங்கும்போது ஜாதி, மதம், இன பாகுபாடு காட்டப்படாது. அனைவருக்கும் வளர்ச்சி மற்றும் அனைவரின் நம்பிக்கைதான் எங்களின் தாரக மந்திரம். மதம், சாதி, வயது, இடத்தை கடந்து அனைவருக்கும் வசதி வாய்ப்பு கிடைக்கிறது" என்றார்.


பின்னர், பேசிய அமெரிக்க அதிபர் பைடன், "ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்தையும் நாங்கள் நம்புகிறோம். அது அமெரிக்காவின் டிஎன்ஏவில் உள்ளது. இந்தியாவின் டிஎன்ஏவில் உள்ளது. முழு உலகமும் எங்கள் வெற்றியில் பங்கு வகிக்கிறது என்று நான் நம்புகிறேன்" என்றார்.


மோடி உரையை புறக்கணித்த அமெரிக்க எம்பிக்கள்:


இந்தியாவில் மத சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவதாக கூறி, பிரதமர் மோடி உரையாற்றிய அமெரிக்க நாடாளுமன்ற கூட்டக்கூட்டத்தை இல்ஹான் ஓமர், ரஷிதா த்லைப், அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ ஆகிய மூன்று அமெரிக்க எம்பிக்கள் புறக்கணித்தனர். இது பெரும் விவாத பொருளாக மாறிய நிலையில், பிரதமர் மோடியிடம் அமெரிக்க செய்தியாளர் இந்திய இஸ்லாமியர்கள் குறித்து கேள்வி எழுப்பியது முக்கியத்துவம் பெறுகிறது.


வெள்ளை மாளிகையில் மோடி, பைடன் ஆகியோருக்கிடையே சந்திப்பு நடைபெறுவதற்கு முன்பு, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது இந்திய இஸ்லாமியர்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "இஸ்லாமிய சிறுபான்மையினர் மதிக்கப்படாவிட்டால் இந்தியா சிதறுண்டு செல்லும் அபாயம் உள்ளது" என்றார்.


"எனக்கு நன்றாகத் தெரிந்த பிரதமர் மோடியுடன் நான் உரையாடினால், இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்காவிட்டால், ஒரு கட்டத்தில் இந்தியா பிளவுபடத் தொடங்கும் வாய்ப்பு அதிகம் என்பது எனது வாதத்தின் ஒரு பகுதியாக இருக்கும். அமெரிக்க அதிபர், பிரதமர் மோடியை சந்தித்தால், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து பேசுவது குறிப்பிடத்தகுந்தது" என்றார்.