ஆஃப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் ஷரியத் சட்டத்தின்படி பெண்களுக்கு அவர்களுக்கான உரிமைகள் அங்கே வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் பெண் ஊழியர்களும் பணிக்குத் திரும்பலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் இதற்கிடையே முரணாக வேறு சில சம்பவங்களும் நடந்தன. 


ஆஃப்கானிஸ்தானின் பெண்கள் ரோபாடிக்ஸ் குழு நாட்டிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டது. பெண் செய்தி வாசிப்பாளர் தன் பணியிலிருந்து இரவோடு இரவாகத் துரத்தப்பட்டார் இப்படிப் பல பெண் ஆளுமைகளைத் தற்போது தலிபான்களின் ஆதிக்கத்தால் இழந்துவருகிறது ஆஃப்கானிஸ்தான்.


ஆஃப்கான் பெண்கள் ரோபாடிக்ஸ் குழு




சர்வதேச நாடுகளிலேயே ரோபாடிக்ஸ் துறையில் பெண்களின் ஆதிக்கம் என்பது குறைவுதான். இதற்கிடையே தனக்கு என்று தனியாக முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே உடைய ரோபாடிக்ஸ் குழுவை உருவாக்கி வைத்திருந்தது ஆஃப்கானிஸ்தான். 14 வயது சிறுமி தொடங்கி மொத்தம் 5 உறுப்பினர்களை கொண்ட இந்தக் குழு சர்வதேசப் போட்டிகளில் விருதுகளை வென்றுள்ளது. இதற்கிடையே குறைந்த செலவிலான வெண்டிலேட்டர்களை தயாரிக்கும் ஆய்வில் அந்தக் குழு ஈடுபட்டு வந்தது. தலிபான்களின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து அங்கே தங்களது எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் தற்போது மெக்சிகோவில் தஞ்சம் புகுந்துள்ளது இந்தக் குழு. 


ஃபாத்திமா ஹூசைனி - ஃபேஷன் புகைப்படக்காரர்






தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் கட்டாயம் பெண்கள் முகத்தை முழுக்க மூடி புர்கா அணிந்திருக்கவேண்டும் என்பது விதி. ஆனால் அமெரிக்க ஆதரவுடன் அரசு அமைக்கப்பட்ட பிறகு ஆஃப்கானிஸ்தானில் பெண்களிடம் ஃபேஷன் நாகரிகம் அதிகரித்தது எனலாம். ஆஃப்கான் பொருளாதாரத்தில் ஃபேஷன் ஒரு அங்கமாக ஆனது. ஆஃப்கான் பேஷன் துறையில் கவனிக்கப்படும் புகைப்படக்காரர்களில் ஒருவர் பெண் புகைப்படக்காரரான ஃபாத்திமா ஹூசைனி. தற்போது மீண்டும் அங்கே தலிபான் ஆதிக்கம் தலைதூக்கியுள்ள நிலையில் ஆஃப்கானை விட்டே வெளியேறியுள்ளார் ஃபாத்திமா. ‘எனது ஒரேயொரு சூட்கேஸுடன் நான் இந்த நாட்டைவிட்டுப் போகிறேன். இனி நான் இங்கே திரும்ப முடியாது என எனக்குத் தெரியும்’ என அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 


ஷப்னம் தர்வான் - செய்தி வாசிப்பாளர்






ஆஃப்கானிஸ்தானின் ஒரே 24 மணிநேர செய்திச் சேனலான டோலோ நியூஸ் நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியவர் ஷப்னம். பின்னர் ஆர்டிஏ பாஷ்டோ என்னும் ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்தார். தலிபான் ஆதிக்கம் உள்ள ஆஃப்கானிஸ்தானில் தனது நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்ற ஷப்னம் நிறுவனத்துக்குள் நுழையவிடாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். ’இத்தனைக்கும் நான் புர்கா அணிந்திருந்தேன், ஐ.டி.கார்டும் என்னிடம் இருந்தது. இது புதிய ஆட்சி இனிமேல் உங்களுக்கு இங்கே வேலை இல்லை எனச் சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார்கள்’ என ஷப்னம் கூறுகிறார். 


மலாலா யூசப்சையி 






பெண் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என ஆசைபட்டதற்காக தலிபான்களின் துப்பாக்கி குண்டுகளால் தனது தலையில் துளைக்கப்பட்டவர் மலாலா. பெண்கள் மீதான தலிபான்களின் தாக்குதலுக்கு மிகப்பெரும் சாட்சியம் மலாலா. அண்மையில் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த அவர், ’இரண்டு வாரங்களுக்கு முன்பு பாஸ்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் எனது தலையில் ஆறாவது அறுவை சிகிச்சை நடந்தது. தலிபான்கள் எனது உடல் மீது தொடுத்த துப்பாக்கி வன்முறையின் தொடர்ச்சி இது.துப்பாக்கியால் சுடப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆன பிறகும் அந்த ஒரு குண்டின் தாக்கத்திலிருந்து நான் இன்றளவும் மீண்டு வந்துகொண்டிருக்கிறேன். ஆனால் ஆஃப்கான் மக்கள் இதுபோன்ற லட்சக்கணக்கான தலிபான் துப்பாக்கிகுண்டுகளைத் தாங்கியிருக்கிறார்கள்.அப்படி இறந்தவர்கள் பெயர் வரலாற்றிலிருந்து காணாமல்போவதை எண்ணி எனது மனம் கனக்கிறது’ எனக் கூறியுள்ளார். 


பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த வன்முறைகளுக்கு இடையே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் தலிபான்கள் பெண்கள் உரிமைக்காக என்ன செய்ய இருக்கிறது என்பதை வெளிப்படையாகப் பேசவேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கின்றனர்.