ஆஃப்கானிஸ்தானின் முதல் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சி ’டோலோ நியூஸ்’ அதன் செய்தியாளர் சியர் யாத் தலிபான்களால் தாக்கப்பட்டிருப்பது தற்போது சர்வதேச அளவில் செய்தியாகியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தலிபான்கள் ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றியதை அடுத்து அந்த நாட்டு அதிபர் அபுதாபிக்குத் தப்பி ஓடினார். இதையடுத்து புதிய அதிபர் நியமனத்துக்கான பேச்சுவார்த்தைகளை தலிபான் மேற்கொண்டு வருகிறது.அரசு ஊழியர்கள் வேலைக்குத் திரும்பலாம் பெண் ஊழியர்களும் வேலைக்கு வரலாம் என அறிவித்துள்ளது தலிபான். மற்றொருபக்கம் ஊடகத்தில் இருக்கும் பெண்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறது. அண்மையில் ஷப்னம் தர்வான் என்னும் செய்தி வாசிப்பாளர் அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டார். 






இதற்கிடையேதான் தற்போது சியர் யாத் தாக்கப்பட்ட செய்தியும் வெளியாகியுள்ளது. காபூல் நகரத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சியர் யாத் மற்றும் அவரது கேமிரா மேனை தலிபான்கள் தாக்கியதாகத் தெரிகிறது. தாக்கப்பட்ட சியர் இறந்தார் என்கிற செய்தி வைரலானது. அது பொய்யான செய்தி என உறுதிபடுத்த சியர் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் தாக்கப்பட்டது குறித்துப் பதிவிட்டுள்ளார். தன்னை தலிபான்கள் ஏன் தாக்கினார்கள் எனத் தெரியவில்லை என்றும் தனது கேமிரா, மொபைல் போன் என அத்தனையும் அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து தலிபான் தலைவர்களிடமும் புகார் அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். சியர் தாக்கப்பட்டது குறித்து டோலோ செய்தி நிறுவனமும் தனது செய்திப்பக்கத்தில் பதிவு செய்துள்ளது. 






தலிபான்கள் அதிகாரம் செலுத்தத் தொடங்கியதிலிருந்து தொடர்ச்சியாக அங்கே பத்திரிகையாளர் தாக்கப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்த ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பத்திரிகையாளர்கள் குழுத் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.