இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடந்து வரும் போர், மேற்காசியாவை மிக பெரிய நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் போரால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கிய போர் இன்று 30 வது நாளை எட்டியுள்ளது.
அப்பாவி மக்கள் உயிரிழப்பு:
பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 8,300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள், பெண்கள் ஆவர். காசாவில் நடந்து வரும் போரால் உடைமைகளை இழந்து சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு டிரக் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஐநா வழங்கி வந்தது.
இஸ்ரேல் தொடக்கம் முதல் காசாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் மருத்துவமனை, பின் பள்ளி, குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற போர் விதிமுறையை இஸ்ரேல் பின்பற்றவில்லை என்றும் இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாகவும் உலக நாடுகள் தெரிவித்து வருகிறது. இஸ்ரேல் இந்த போரை நிறுத்த வேண்டும் என தொடர்ச்சியாக ஐ.நா தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகளும் அதனை வலியுறுத்தி வருகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ்:
இருப்பினும் இஸ்ரேல் ஹமாஸை ஒழிக்கும் வரை இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்றும் ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிக்கும் எனறு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை ஹமாஸ் குழுவினர் அடைக்கலமாக கொண்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரஸ், ” கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேல் ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று காசாவில் இருக்கும் மருத்துவமனை அவசர ஊர்தி மீது தாக்குதல் நடத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகள் என பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனே நிறுத்த வேண்டும்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.