முகமது நபி மீது பாஜக செய்தி தொடர்பாளர் வைத்த மோசமான கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய தயாரிப்புகளை குவைத்தில் இயங்கும் சூப்பர் மார்க்கெட்டுகள் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளன.
சர்ச்சைக்குரிய கருத்து:
தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, எதிர்ச்தரப்பு நபருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி முகமது நபி பற்றி மோசமாக விமர்சனம் செய்தார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. அதே போல நவீன் குமார் ஜிண்டாலின் பேச்சும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் உலகம் முழுவதும் கவனத்தைப் பெற, இஸ்லாமிய நாடுகள் பாஜக நிர்வாகியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றன.
இந்திய தயாரிப்புகள் புறக்கணிப்பு:
குவைத், கத்தார், ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, ஓமன் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மன்னிப்பும் கேட்க வலியுறுத்தின. இந்த விவகாரத்தில் இந்தியா தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தாலும், பாஜக செய்தி தொடர்பாளரின் பேச்சு இந்நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்வினையாக இந்தியர்களை பணிநீக்கம் செய்வது இந்திய தயாரிப்புகளைப் புறக்கணிப்பது உள்ளிட்ட செயல்களில் இறங்கியுள்ளன. இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு சமூக வலைதளங்களில் இஸ்லாமிய நாட்டினர் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
குவைத் இஸ்லாமிய மக்களாகிய நாங்கள் முகமது நபிகளை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று இந்திய தயாரிப்புகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிறுவனத்தின் சிஇஓ நாசர் அல் முதாய்ரி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, முஸ்லிம் நாடுகளின் அமைப்பு ஆகியவையும் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளன.
பதிலடி தரும் இந்தியர்கள்:
அல் அர்தியா கூட்டுறவு சங்கம் இந்திய டீ மற்றும் மற்ற இந்திய தயாரிப்புகளை இஸ்லாமிய வெறுப்பு என்று கூறி புறக்கணிக்கத் தொடங்கியுள்ளன. ஒரு சில சூப்பர் மார்க்கெட்டுகள் இந்திய ர்பொருள்களை நீக்கிவிட்டோம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதற்கு பதிலடியாக கத்தார் ஏர்வேஸை புறக்கணிப்போம் என்று இந்தியாவில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ள இந்தியர்கள் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர். பாஜகவினரின் இந்த பேச்சால் பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதே போல வெளிநாட்டு இந்தியர்களால் இந்தியாவிற்கு வரும் பணத்தின் மூலமாக் இந்தியாவிற்கு பல பில்லியன் டாலர்கள் வருமானம் கிடைக்கும் நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் இந்த வருவாய் பாதிக்கப்படும். இந்தியர்களுக்கு பதிலாக பாகிஸ்தானியர்களை வேலைக்கு சேர்க்கும் போக்கு அரபு நாடுகளில் அதிகமாகிவருகிறது என்ற கருத்துகள் நிலவி வந்த நிலையில் தற்போதைய சர்ச்சை இந்த போக்கை வேகப்படுத்தும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.